திருப்பத்தூர் அருகே, கஞ்சா செடி வளர்த்து விற்ற முதியவர் கைது
திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் கஞ்சா செடிவளர்த்து விற்பனை செய்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் தாலுகா சந்திராபுரம் கொல்லங்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தருமன் (வயது 75). இவருக்கு சந்திராபுரம் மலை அடிவாரத்தில் சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு விவசாயம் என்ற பெயரில் நீண்ட காலமாக கஞ்சா செடிகளை வளர்த்து விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து கந்திலி போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் காட்பாடியில் உள்ள போதை தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஏ.டி.ராமச்சந்திரன், கந்திலி இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் தருமனின் நிலத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதை கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து தருமனை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் சம்பவ இடத்திற்கு சென்று கஞ்சா செடிகளை பார்வையிட்டார். பல லட்சம் மதிப்புள்ள கஞ்சா செடிகளை அகற்றி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது. அப்போது, துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், வருவாய் ஆய்வாளர் தமிழ் செல்வி, கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
மலையடிவாரங்களில் யாராவது இதுபோன்று கஞ்சா செடி பயிர் செய்திருந்தால் உடனடியாக பொதுமக்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையத்திலோ அல்லது 9442992526 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story