பாணாவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆவி பிடிக்கும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் - கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி உத்தரவு
பாணாவரம் ஆரம்பசுகாதார நிலையத்தில் ஆவி பிடிக்கும் சிகிச்சை முறையை மேற்கொள்ள வேண்டும் என்று கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி உத்தரவிடார்.
காவேரிப்பாக்கம்,
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி மற்றும் கூடுதல் ஆணையர் (வணிகவரி) ஜி.லட்சுமிபிரியா, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் ச.திவ்யதர்ஷினி ஆகியோர் பாணாவரம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் குடிமராமத்து பணிகளை நேற்று மாலை ஆய்வு செய்தனர்.
பாணாவரத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், அம்மா கிட் வழங்கப்படுவது குறித்தும் அங்கிருந்த கர்ப்பிணிகள், நோயாளிகளிடம் கேட்டறிந்தனர். அவர்களிடம் கர்ப்பிணிகளுக்கு முத்துலட்சுமி ரெட்டி உதவித்தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கர்ப்பிணிகள் கேட்டுக் கொண்டனர்.
சித்தா மருத்துவ உபகரணங்களை சீர்படுத்தி பயன்படுத்த வேண்டும், ஆவி பிடிக்கும் சிகிச்சை முறையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறிய அவர்கள், பதிவேடுகளை சரியான முறையில் பராமரிக்கப் படுகின்றனவா என்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து பாணாவரம் சிறுபாசன ஏரி கால்வாய் குடிமராமத்து திட்டத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாருதல், முடிவுற்றபணிகள் குறித்தும் ஆய்வுசெய்தனர். காவேரிப்பாக்கம் ஒன்றியம் மங்கலம் ஊராட்சியில் ரூ.4 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டில் குளம் புனரமைத்தல் பணிகளையும் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் உமா, மாவட்ட மருத்துவ அலுவலர் வேல்முருகன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார், செயற்பொறியாளர் அருண், உதவி செயற்பொறியாளர் சுமதி, சோளிங்கர் தாசில்தார் ரேவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அதிகாரிகள், உடனிருந்தனர்.
Related Tags :
Next Story