புதுப்பெண் இறந்த விவகாரம்: “மகளை கொன்று தூக்கில் தொங்க விட்டுள்ளனர்” - தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு
நாகர்கோவில் அருகே புதுப்பெண் இறந்த விவகாரத்தில் “எனது மகளை கொன்று தூக்கில் தொங்க விட்டுள்ளனர்“ என்று அவருடைய தந்தை பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் அருகே இலந்தையடிதட்டு திக்கிலான்விளையை சேர்ந்த சுஜிதா (வயது 23) என்பவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இந்த சம்பவம் தொடர்பாக ஈத்தாமொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சுஜிதாவின் தந்தை பேபி செல்வன் நேற்று தன் மனைவி மற்றும் உறவினர்களுடன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து கண்ணீர் மல்க ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
என் மகளை கடந்த 1-11-2019 அன்று சிவரஞ்சித் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தேன். திருமணத்தின்போது என் மகளுக்கு தங்க நகை அணிவித்தேன். சிவரஞ்சித், அவருடைய தம்பி மற்றும் சகோதரிக்கும் நகை அணிவித்தேன். வீட்டு உபயோக பொருட்களும் கொடுத்தேன். ஆனால் திருமணமான சில நாட்களில் எனது மகளை கணவரும், அவருடைய குடும்பத்தாரும் தகாத வார்த்தைகள் பேசி அவமானப்படுத்தினர்.
மேலும் திருமண கடன் இருப்பதாக கூறி என் மகளிடம் ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். அதோடு அவரை கத்தியால் குத்த முயன்றுள்ளனர். அதை தடுக்க முயன்றபோது எனது மகளின் கையில் காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தோம். ஆனால் என் மகளின் கணவர் வீட்டார் கேட்டுக்கொண்டதால் புகார் கொடுக்கவில்லை.
ஆனால் அதன்பிறகும் என் மகளிடம் ரூ.50 ஆயிரம் கேட்டு தாக்கியுள்ளனர். எனவே ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி கொடுத்தோம். இந்த நிலையில் என் மகளின் கணவர் வீட்டார் சம்பவத்தன்று என் மனைவியிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது என் மகள் வீட்டின் தனி அறையில் சென்று கதவை பூட்டிக்கொண்டதாகவும், வந்து அழைத்து செல்லும்படியும் கூறினர். அதன்பேரில் நான் அங்கு சென்று பார்த்தபோது படுக்கை அறையில் என் மகள் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். ஆனால் அவர் தற்கொலை செய்யவில்லை. அவருடைய கணவர் வீட்டார் தான் திட்டமிட்டு என் மகளை கொன்று தூக்கில் தொங்க விட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story