நாகர்கோவிலில், சாலைகளை சீரமைக்கக்கோரி நாற்று நடும் போராட்டம் இளைஞர் காங்கிரசார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நடத்தினர்
நாகர்கோவிலில் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க கோரி வாழை-நாற்று நடும் போராட்டங்களை இளைஞர் காங்கிரசார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நடத்தினர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் மாநகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மற்றும் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டன. ஆனால் பணிகள் நிறைவடைந்த இடங்கள் சீரமைக்கப்படவில்லை. இதனால் மணிமேடையில் இருந்து அண்ணா பஸ் நிலையம் வரை உள்ள சாலை, சவேரியார் கோவில் சந்திப்பில் இருந்து செட்டிகுளம் வரை உள்ள சாலை, வடசேரி சந்திப்பில் இருந்து கிருஷ்ணன் கோவில் செல்லும் சாலை போல் பல்வேறு பிரதான சாலைகளும், தளவாய் தெரு போன்ற தெருக்களும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன.
அதிலும் குறிப்பாக மழை பெய்தால் சாலை இருக்கும் இடமே தெரியாமல் சேறும், சகதியுமாக வயல்வெளி போல காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே சாலைகளை சீரமைக்கக்கோரி பல்வேறு தரப்பினர் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சாலைகளை சீரமைக்க கோரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் வேப்பமூடு சந்திப்பில் வாழை நடும் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாநில செயலாளர் நவீன் தலைமை தாங்கினார். வாழை மரங்களுடன் காங்கிரசார் வந்த போது சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது. எனவே போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்ற எண்ணத்தில் சாலை ஓரம் குவித்து வைத்திருந்த மணல் குவியலில் வாழை கன்றுகளை நட்டனர்.
பின்னர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆனால் இந்த ஆர்ப்பாட்டமானது போலீசாரின் அனுமதியில்லாமல் நடந்தது. எனவே போராட்டம் நடத்தியவர்களை உடனே போலீசார் கலைந்து போக செய்தனர். போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கிருஷ்ணன் கோவில் சந்திப்பில் நாற்று நடும் போராட்டம் நடந்தது. ஏற்கனவே அந்த பகுதியில் உள்ள சாலை பள்ளமும், மேடுமாக காட்சி அளிக்கிறது. அதிலும் நேற்று காலை பள்ளத்தில் தண்ணீர் தேங்கி கிடந்தது. அந்த தண்ணீரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நாற்றுகளை நட்டும், காகிதத்தில் செய்த படகுகளை விட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாநகர குழு உறுப்பினர் அஜீஷ் தலைமை தாங்கினார். அந்தோணி உள்பட பலர் கலந்துகொண்டு சாலைகளை சீரமைக்க கோரி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story