இலங்கையில் கரை ஒதுங்கிய ராமேசுவரம் மீனவர் உடலை கப்பலில் எடுத்து வந்து அடக்கம் செய்தனர்


இலங்கையில் கரை ஒதுங்கிய ராமேசுவரம் மீனவர் உடலை கப்பலில் எடுத்து வந்து அடக்கம் செய்தனர்
x
தினத்தந்தி 7 Oct 2020 1:24 PM GMT (Updated: 7 Oct 2020 1:24 PM GMT)

கடலில் விழுந்து இறந்து இலங்கையில் கரை ஒதுங்கிய ராமேசுவரம் மீனவரின் உடலானது கப்பலில் எடுத்து வரப்பட்டு, சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 30-ம் தேதி தனிஸ்லாஸ் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் சேதுபாண்டி, யுனெஸ்கோ, இமானுவேல், சுவித், ஜோகன், காட்சன், இன்னாசி ஆகிய 7 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்த போது எதிர்பாராதவிதமாக படகில் இருந்து மீனவர் காட்சன் கடலுக்குள் தவறி விழுந்தார். அவரை சக மீனவர்கள் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் மீனவர் காட்சனின் உடல் இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டம் அலிபுட்டி பகுதி கடற்கரையில் ஒதுங்கியது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் செல்போன் மூலம் புகைப்படம் எடுத்து, ராமேசுவரத்தை சேர்ந்த சில மீனவர்களுக்கு அனுப்பி உள்ளனர். அந்த படத்தை பார்த்து அது காட்சனின் உடல் என அடையாளம் காணப்பட்டது. எனவே இலங்கையில் இருந்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைதொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தின. அதன்பேரில் நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலில் காட்சனின் உடலை ஏற்றி சர்வதேச கடல் பகுதிக்கு கொண்டு வந்தனர். அப்போது அங்கு சென்ற இந்திய கடலோர காவல் படை கப்பலில் மீனவரின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

அதன் பின்னர் இந்திய கடலோர காவல் படையினர், கோடியக்கரை பகுதிக்கு கப்பலில் உடலை கொண்டு வந்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மீனவரின் உடல் அவரது சொந்த ஊரான ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பகுதிக்கு இரவில் கொண்டு வரப்பட்டது. காட்சனின் உடலை பார்த்து அவர்களது உறவினர்களும் மற்றும் குடும்பத்தினரும் கதறியது சோகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதுபற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி சேசுராஜா கூறும் போது, “கடலில் தவறி விழுந்து இலங்கையில் கரை ஒதுங்கிய மீனவரின் உடலை உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்த மத்திய, மாநில அரசுக்கும், இலங்கை அரசுக்கும் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். இறந்துபோன மீனவரின் குடும்பத்திற்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்கி உதவி செய்ய வேண்டும்” என்றார்.


Next Story