எமரால்டு கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் விரிசல்: சோதனை ஓட்டத்தின்போது தண்ணீர் வெளியேறி வீணாகியது


எமரால்டு கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் விரிசல்: சோதனை ஓட்டத்தின்போது தண்ணீர் வெளியேறி வீணாகியது
x
தினத்தந்தி 7 Oct 2020 1:37 PM GMT (Updated: 7 Oct 2020 1:37 PM GMT)

எமரால்டு கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் விரிசல் ஏற்பட்டதால், சோதனை ஓட்டத்தின்போது தண்ணீர் வெளியேறி வீணாகியது.

ஊட்டி,

குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை ரேலியா அணை பூர்த்தி செய்து வருகிறது. ஆனால் மக்கள் தொகை பெருகி வரும் நிலையில், ரேலியா அணையை மட்டும் கொண்டு குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்வதில் சிக்கல் நீடித்தது. இதனால் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. மேலும் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அவல நிலை காணப்படுகிறது. இதனை சரி செய்யக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குன்னூர் நகராட்சி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய எமரால்டு கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி மஞ்சூர் அருகே உள்ள எமரால்டு அணையில் இருந்து தண்ணீர் எடுக்க பெரிய குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வந்தது. சாலையோரத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு எமரால்டு முதல் ஊட்டி அண்ணா காலனி வழியாக குன்னூர் வரை குழாய்கள் பதிக்கப்பட்டது. பின்னர் சில இடங்களில் நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து எமரால்டு அணையில் இருந்து குழாய்களில் தண்ணீரை செலுத்தி சோதனை ஓட்டம் நடந்தது. குழாய்களில் செல்லும் தண்ணீர் குன்னுரை சென்றடைகிறதா?, வழியில் ஏதேனும் ஓரிடத்தில் உடைப்பு உள்ளதா? என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது குன்னூர் பகுதியில் குழாயில் இருந்து தண்ணீர் அதிகளவில் பீறிட்டு வெளியேறியது.

தொடர்ந்து விரிசல் ஏற்பட்ட குழாய்கள் சரி செய்யப்பட்டன. விரைவில் எமரால்டு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குன்னூர் நகர மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தில் குன்னூர் அருகே வெலிங்டன், அருவங்காடு பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகிக்கப்படும். ஏற்கனவே ஊட்டி நகராட்சி மூலம் பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து வெலிங்டன் ராணுவ முகாமுக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story