மாவட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்


மாவட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2020 8:12 PM IST (Updated: 7 Oct 2020 8:12 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் வேலை திட்டத்தை நகர் புறங்களுக்கும் அமலாக்க கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் ராஜமாணிக்கம், நிர்வாகிகள் ரவி, கீதாபிரியா, முனியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜா போராட்டம் குறித்து விளக்கி பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டார செயலாளர் சக்திவேல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வட்டார செயலாளர் லோகநாதன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட பொருளாளர் ராஜாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி முத்து மற்றும் சிசுபாலன், குமரேசன், அம்பிகா, மல்லிகா, கோவிந்தன், பாலசிங்கம், தனலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பென்னாகரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் முருகன், பகுதி செயலாளர்கள் வெள்ளியங்கிரி, சக்திவேல், அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் பெண்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 100 நாள் வேலை கேட்டு பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

பேரூராட்சி பகுதியில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் இயக்குனர் ரங்கராஜன் குழு தமிழக அரசுக்கு வழங்கிய பரிந்துரைகளை ஏற்று 200 நாட்கள் வேலை 600 ரூபாய் கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து 100 நாள் வேலை கேட்டு பேரூராட்சி அலுவலகத்தில் அவர்கள் மனு கொடுத்தனர். இந்த போராட்டத்தில் பெண்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story