ஜெயங்கொண்டத்தில், உதவுவதுபோல் நடித்து மூதாட்டியிடம் ஏ.டி.எம். கார்டை பெற்று ரூ.30 ஆயிரம் மோசடி போலீசார் விசாரணை


ஜெயங்கொண்டத்தில், உதவுவதுபோல் நடித்து மூதாட்டியிடம் ஏ.டி.எம். கார்டை பெற்று ரூ.30 ஆயிரம் மோசடி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 7 Oct 2020 9:10 PM IST (Updated: 7 Oct 2020 9:10 PM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டத்தில் பணம் எடுத்து தர உதவுவது போல் நடித்து, மூதாட்டியிடம் ஏ.டி.எம். கார்டை பெற்று ரூ.30 ஆயிரத்தை எடுத்து மர்ம நபர் மோசடி செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம்,

கடலூர் மாவட்டம் கீழக்கஞ்சங்கொல்லை கிராமம் அக்ரகாரத்தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மனைவி அறிவளர்செல்வி(வயது 63). இவருக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வைக்கப்பட்டுள்ள நகைகளை மீட்பதற்காக சென்னையில் உள்ள தனது மகள் மூலம் ரூ.31 ஆயிரத்தை அவரது பேரன் உறவுமுறையான ராமானுஜம் என்பவரது வங்கிக் கணக்கில் போடச்செய்துள்ளார்.

இதையடுத்து ராமானுஜத்தின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி, அந்த பணத்தை எடுப்பதற்காக ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு அறிவளர்செல்வி சென்றார். அவருக்கு ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் எடுக்க தெரியாததால், அருகில் இருந்த ஒருவரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரூ.30 ஆயிரம் எடுத்து தரும்படி கூறியுள்ளார். பின்னர் அந்த நபரிடம் ரகசிய எண்ணையும் கொடுத்துள்ளார்.

அப்போது அந்த நபர் தான் ஏற்கனவே வைத்திருந்த மற்றொரு ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பார்த்து, பணம் வரவில்லை என அறிவளர்செல்வியிடம் தெரிவித்து, கார்டை மாற்றிக் கொடுத்துவிட்டு, அறிவளர்செல்வி கொடுத்த ஏ.டி.எம். கார்டை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். மேலும் அந்த வங்கி கணக்கில் இருந்து நிமிடத்திற்கு ஒரு முறை ரூ.10 ஆயிரம் வீதம் 3 முறையாக ரூ.30 ஆயிரத்தை அந்த நபர் எடுத்து விட்டார்.

இது பற்றி அறியாத அறிவளர்செல்வி சம்பந்தப்பட்ட வங்கியில் விசாரித்தபோது, அந்த நபர் உதவுவதுபோல் நடித்து ஏ.டி.எம். கார்டை மாற்றிக் கொடுத்ததும், வங்கிக்கணக்கில் இருந்த ரூ.30 ஆயிரத்தை எடுத்து மோசடி செய்ததும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Next Story