விராலிமலை அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றவர்களால் பரபரப்பு


விராலிமலை அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றவர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Oct 2020 4:34 PM GMT (Updated: 7 Oct 2020 4:34 PM GMT)

விராலிமலை அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா கொடும்பாளூர் சத்திரம் அருகே சத்திரம் குளம் உள்ளது. இந்த குளத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள கட்டிடங்களை அகற்றக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, நேற்று வருவாய்த்துறை, வட்டார வளர்ச்சித்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்களுடன் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், அதிகாரிகள் வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி வீடுகள் மற்றும் கடைகளை அகற்றக்கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அதிகாரிகள் இது நீதிமன்ற உத்தரவு என கூறி, மின் இணைப்பை துண்டித்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட தொடங்கினர்.

அப்போது, ஒரு ஆண் மற்றும் பெண் ஆகியோர் அவர்களது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இந்தநிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களின் உடலில் தண்ணீரை ஊற்றி தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து பொதுமக்கள், நீதிமன்றத்தில் தடை உத்தரவு எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

எனவே அதுவரை கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து அதிகாரிகள் 2 வாரகால அவகாசம் கொடுத்து பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.

Next Story