100-க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்து கைவரிசை: பட்டதாரி கொள்ளையன் கைது; 53 பவுன் நகைகள் பறிமுதல்


100-க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்து கைவரிசை: பட்டதாரி கொள்ளையன் கைது; 53 பவுன் நகைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 7 Oct 2020 10:59 PM GMT (Updated: 7 Oct 2020 10:59 PM GMT)

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் பட்டப்பகலில் வீடுகளுக்குள் புகுந்து கைவரிசை காட்டிய பட்டதாரி கொள்ளையன் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 53 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2 மாதத்தில் 6 கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனையடுத்து காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.சாமுண்டீஸ்வரி மற்றும் திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபீ உள்ளிட்ட 8 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

அதை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட எல்லையான வேப்பம்பட்டு சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

இதனால் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று மேலும் நடத்திய தீவிர விசாரணையில், கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடங்களில் கண்காணிப்பு கேமராவில் சிக்கிய கொள்ளையன் உருவமும், பிடிபட்டவரின் உருவமும் ஒரே மாதிரியாக இருந்தது தெரியவந்தது.

பட்டதாரி கொள்ளையன்

அப்போது அந்த நபர் தான் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததை ஒத்துக்கொண்டார்.

மேலும் பிடிபட்ட வாலிபர் பாண்டியன் (எ) மாயகிருஷ்ணன் (29) என்பதும், அவர் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த பட்டதாரி என்பதும் தெரியவந்தது. அவரிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பகலில் பூட்டிய வீடுகளின் பூட்டை உடைத்து இதுவரை 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் திருடிய வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடமிருந்து 53 பவுன் தங்க நகைகள், ஒரு லேப்டாப் மற்றும் 2 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை பாராட்டும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் ஊக்கத்தொகை கொடுத்து கவுரவித்தனர்.

Next Story