பட்டுக்கோட்டை அருகே, கோவில் உண்டியலை உடைத்து பணம்-நகைகள் கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


பட்டுக்கோட்டை அருகே, கோவில் உண்டியலை உடைத்து பணம்-நகைகள் கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 8 Oct 2020 4:00 AM IST (Updated: 8 Oct 2020 4:40 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம்-நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சூரப்பள்ளம் கிராமத்தில் சூரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் அர்ச்சகர் சந்திரசேகர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜைகளை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்று காலை அந்த வழியாக நடைப்பயிற்சி சென்ற பொதுமக்கள், கோவில் எதிரே தென்னந்தோப்பில் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சூரப்பள்ளம் கிராம நாட்டாண்மைகாரர்களுக்கும், கோவில் அர்ச்சகருக்கும் தகவல் கொடுத்தனர்.

இந்த தகவலின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், கோவிலில் உள்ள 3 கேட்டுகளின் பூட்டுகளையும் உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், கோவிலில் இருந்த உண்டியலை வெளியே தூக்கிச்சென்று அதில் இருந்த பணம் மற்றும் சில்லறை காசுகளையும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களையும் அள்ளிச்சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story