வழுவூரில் கொள்முதல் நிறுத்தப்பட்டதை கண்டித்து மழையில் நனைந்த நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் சாலைமறியல் - போக்குவரத்து பாதிப்பு


வழுவூரில் கொள்முதல் நிறுத்தப்பட்டதை கண்டித்து மழையில் நனைந்த நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் சாலைமறியல் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 7 Oct 2020 10:15 PM GMT (Updated: 8 Oct 2020 1:47 AM GMT)

வழுவூரில் கொள்முதல் நிறுத்தப்பட்டதை கண்டித்து மழையில் நனைந்த நெல்மூட்டைகளுடன் விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தபகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குத்தாலம்,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வழுவூரில் அரசு நெல்கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் திடீரென நெல் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில் வழுவூர் கடைவீதியில் மழையில் நனைந்து சேதமான நெல்மூட்டைகளை சாலையில் போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் 60 நாட்களுக்கு மேலாக 10 ஆயிரம் மூட்டைகளை விற்பனைக்காக கொள்முதல் நிலையத்தில் வைத்து பாதுகாத்து வருவதாகவும், சமீபத்தில் பெய்த மழையில் மூட்டைகள் நனைந்து முளைத்துவிட்டதாகவும், உடனடியாக அரசு நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கொள்முதல் செய்ய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர்.

இதையடுத்து விவசாயிகள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story