பொறையாறு- செம்பனார்கோவில் பகுதிகளில் சம்பா நடவு பணிகள் தீவிரம்
பொறையாறு-செம்பனார்கோவில் பகுதிகளில் சம்பா நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொறையாறு,
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கடைமடை பகுதியில் விவசாயிகள் ஒரு போகம் சாகுபடி செய்து வருகின்றனர். கடைமடை பகுதி விவசாயிகள் காவிரி நீரை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது ஆறுகளில் தண்ணீர் போதிய அளவு வருவதால் பொறையாறு காட்டுச்சேரி, தில்லையாடி, திருவிடைக்கழி, விசலூர், செம்பனார்கோவில், கீழமாத்தூர், மேமாத்தூர், எரவாஞ்சேரி, இலுப்பூர் திருவிளையாட்டம், நல்லாடை அரசூர், கொத்தங்குடி காழியப்பநல்லூர், காலகஸ்திநாதபுரம் ஆகிய சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தற்போது சம்பா நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் விவசாயிகள் நிலத்தில் புழுதி அடித்து, நாற்றங்கால் அமைத்து எந்திர மூலமும், ஆட்கள் மூலமும் நடவு பணிகளை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,
சில ஆண்டுகளுக்கு முன் உரிய நேரத்தில் கடைமடை பகுதிக்கு காவிரி நீர் கிடைக்காததால் சாகுபடி செய்ய சிரமப்பட்டு வந்தோம். விவசாய தொழிலாளர்களும் மாற்று தொழிலுக்கு சென்றுவிட்ட நிலையில் இந்த ஆண்டு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நேரத்தில் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பகுதிக்கு பாசனத்திற்கு தண்ணீர் வழங்கினார். அதனை தொடர்ந்து இதை நம்பி நாங்கள் விவசாய பணியை தீவிரப்படுத்தி தற்போது சம்பா நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஆண்டுதோறும் கடைமடை பகுதிக்கு காவிரி நீர் கிடைத்தால் விவசாய தொழில் செழிப்பாக இருக்கும் என்றனர்.
Related Tags :
Next Story