குடவாசல் அருகே, மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு - உறவினர்கள் சாலைமறியல்


குடவாசல் அருகே, மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு - உறவினர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 8 Oct 2020 3:45 AM IST (Updated: 8 Oct 2020 7:33 AM IST)
t-max-icont-min-icon

குடவாசல் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

குடவாசல்,

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள மனப்பறவை மெயின் ரோட்டை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் முருகன்(வயது19). நேற்று இவர் குடவாசல் பிடாரி கோவில் தெருவை சேர்ந்த ஜமால் என்பவரது வீட்டின் பின்புறம் வீடு கட்டுவதற்காக குழி தோண்டும் பணியில் ஈடுபட்டார். இரவு நேரத்தில் பணி நடைபெற்றதால் வெளிச்சம் வேண்டி மின்சார விளக்கு போடப்பட்டிருந்தது. அப்போது அந்த வயரில் மின்கசிவு ஏற்பட்டது தெரியாமல் முருகன் அதில் கை வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது.

இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை குடவாசல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து முருகனின் அண்ணன் கருணாகரன் கொடுத்த புகாரின் பேரில் குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் முருகனின் உறவினர்கள் ஜமால் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கும்பகோணம்-திருவாரூர் சாலையில் மறியல் செய்தனர். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவேல் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இதையடுத்து முருகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Next Story