தஞ்சை மாவட்டத்தில் 3 இடங்களில் நடந்த சிறப்பு முகாமில் 159 மனுக்களுக்கு உடனடி தீர்வு
தஞ்சை மாவட்டத்தில் 3 இடங்களில் நடந்த சிறப்பு முகாமில் 159 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. தஞ்சையில் நடந்தமுகாமில் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் பங்கேற்றார்.
தஞ்சாவூர்,
தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ராஜேஸ்தாஸ் உத்தரவுப்படி, திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜெய்ராம் வழிகாட்டுதல்படி தஞ்சை டி.ஐ.ஜி. ரூபேஸ்குமார்மீனா மேற்பார்வையில் தஞ்சை மாவட்டத்தில சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதில் தஞ்சை மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் நிலுவையில் இருக்கும் மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது. இதில் பொதுமக்கள் முக கவசம், கையுறை அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் பங்கேற்றனர். தஞ்சையில் நடந்த முகாமில் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் கலந்து கொண்டு மனுக்களை பெற்று விசாரணை மேற்கொண்டார்.
இதே போல் கும்பகோணம், பட்டுக்கோட்டை உட்கோட்டங்களில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மொத்தம் 159 மனுக்கள் பெறப்பட்டு அவற்றின் வாதி, பிரதிவாதி ஆகியோரை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முன்னதாக போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் நிருபர்களிடம் கூறுகையில், “தஞ்சை மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. ஏற்கனவே பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் குறித்து போலீசார் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
இந்த முகாம்கள் குறித்து பொதுமக்களிடம் உள்ள வரவேற்பு குறித்து 15 நாட்கள் அல்லது மாதத்திற்கு ஒருமுறை நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். இதில் சொத்து வழக்கு, குடும்ப வழக்கு தொடர்பான மனுக்களும் வருகிறது. அந்த மனுக்கள் விசாரித்து மேல் நடவடிக்கைக்கு அனுப்பப்படும். தஞ்சை மாவட்டத்தில் தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விதிமுறைகளை மீறிய 17 ஆயிரம் பேரிடம் ரூ.34 லட்சம் உடனடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது”என்றார்.
அப்போது தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story