குளித்தலை அருகே, ஆடுகள் தருவதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றியவருக்கு கத்திக்குத்து - இறைச்சி கடைக்காரர் கைது


குளித்தலை அருகே, ஆடுகள் தருவதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றியவருக்கு கத்திக்குத்து - இறைச்சி கடைக்காரர் கைது
x
தினத்தந்தி 8 Oct 2020 3:00 AM IST (Updated: 8 Oct 2020 9:16 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை அருகே ஆடுகள் தருவதாக கூறி பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியவரை கத்தியால் குத்திய இறைச்சி கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 39). இவர் குளித்தலை அருகே உள்ள பங்களா புதூரை சேர்ந்த இறைச்சி கடைக்காரர் மாரியப்பன் (56) என்பவரிடம் ஆடுகள் தருவதாக கூறி, அவசர தேவைக்கு ரூ.30 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார். இந்தநிலையில் மாரியப்பன் ஆடுகள் பிடிப்பதற்காக நேற்று முன்தினம் சரவணன் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது கைமாற்றாகவே தான் பணம் வாங்கியதாகவும், ஆடு தருவதாக கூறவில்லை எனவும், மெதுவாக தான் பணம் தருவேன் என்று சரவணன் அவரிடம் கூறி ஆடுகளை தரமறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன் பணம் வாங்கிக் கொண்டு தன்னை ஏமாற்றுகிறாயா என திட்டி, தான் கையில் வைத்திருந்த ஆட்டை அறுக்கும் கத்தியால் சரவணனின் உடலில் பல இடங்களில் குத்தியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாரியப்பனிடம் விசாரணை நடத்தினர். பின்னர் படுகாயமடைந்த சரவணனை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து சரவணனின் தந்தை தங்கராசு அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து இறைச்சி கடைக்காரர் மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story