மாவட்டத்தில், புகார்தாரர்களின் வீட்டிற்கே சென்று போலீசார் விசாரணை - ஒரே நாளில் 43 மனுக்களுக்கு தீர்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் புகார்தாரர்களின் வீட்டிற்கே சென்று போலீசார் விசாரணை நடத்தும் நடைமுறை நேற்று அமலுக்கு வந்தது. அந்தவகையில் ஒரே நாளில் 43 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன.
புதுக்கோட்டை,
கொரோனா வைரஸ் தொற்று இன்னும் குறையாததால் வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவி வருவதை தவிர்க்கும் பொருட்டும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையங்களுக்கு வரும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் பெறப்பட்ட புகார்களின் மீது புகார்தாரர்களின் வீட்டிற்கே நேரிடையாக சென்று விசாரணை செய்து, மக்களுக்கு உரிய வகையில் தீர்வுகாண வழிவகைசெய்ய வேண்டும் என கூடுதல் டி.ஜி.பி. ராஜேஸ்தாஸ் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் புகார்தாரர்களின் வீட்டிற்கே சென்று போலீசார் விசாரிக்கும் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது நேரிடையாக சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளால் தீர்வு காணப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார்.
இந்த புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் உள்ள போலீசார், புகார்தாரர்களின் வீட்டிற்கே சென்று விசாரித்தனர். டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தனது சரகத்திற்குட்பட்ட பகுதியான ஆதனக்கோட்டையில் விசாரணை நடத்தினார். மேலும் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 43 புகார் மனுக்கள் தீர்வு காணப்பட்டன.
Related Tags :
Next Story