மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உறுப்புகள் தானம்: மதுரையில் இருந்து 2¼ மணி நேரத்தில் நாகர்கோவில் சென்ற சிறுநீரகம் - விவசாயிக்கு பொருத்தப்பட்டது


மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உறுப்புகள் தானம்: மதுரையில் இருந்து 2¼ மணி நேரத்தில் நாகர்கோவில் சென்ற சிறுநீரகம் - விவசாயிக்கு பொருத்தப்பட்டது
x
தினத்தந்தி 8 Oct 2020 6:30 AM GMT (Updated: 8 Oct 2020 4:57 AM GMT)

மதுரையில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் சிறுநீரகம் 2¼ மணி நேரத்தில் நாகர்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த சிறுநீரகம், அறுவை சிகிச்சை மூலம் விவசாயிக்கு பொருத்தப்பட்டது.

மதுரை,

நாகர்கோவில் அருகே பறக்கையை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 44), விவசாயி. சிறுநீரக கோளாறால் அவதிப்பட்ட இவர், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவருக்கு 2 சிறுநீரகமும் செயலிழந்தது. இதனையடுத்து வெங்கடேஷ் அவ்வப்போது டயாலிசிஸ் செய்துவந்தார். இதற்கிடையே கடந்த 2016-ம் ஆண்டு சிறுநீரக தானம் வேண்டி அரசிடம் பதிவு செய்தார்.

இந்த நிலையில் மதுரையை சேர்ந்த வேல்முருகன் (27) என்பவர் விபத்தில் சிக்கினார். அவருக்கு மதுரை வேலம்மாள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சையில் இருந்தபோதே அவர் மூளைச்சாவு அடைந்தார்.

இதை தொடர்ந்து வேல்முருகனின் 2 சிறுநீரகத்தை தானம் செய்ய குடும்பத்தார் முடிவு செய்தனர். இதுபற்றி அரசிடமும் தெரிவிக்கப்பட்டது. எனவே வேல்முருகனின் ஒரு சிறுநீரகத்தை நாகர்கோவிலில் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த வெங்கடேசுக்கு கொடுக்க அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து வெங்கடேசுக்கு சிகிச்சை அளித்து வரும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஒரு ஆம்புலன்ஸ் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆம்புலன்சில் ஒரு டாக்டரும் உடன் வந்தார். ஆம்புலன்சை நாகர்கோவிலை சேர்ந்த செந்தில்குமார் (40) என்பவர் ஓட்டினார். பின்னர் அங்கு மூளைச்சாவு அடைந்த வேல்முருகனின் சிறுநீரகம் எடுக்கப்பட்டு ஒரு பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இந்த சிறுநீரகம் வைக்கப்பட்ட பெட்டியை எடுத்துக்கொண்டு ஆம்புலன்ஸ் நேற்று மதியம் 12.15 மணிக்கு மதுரையில் இருந்து குமரிக்கு புறப்பட்டது. வரும் வழியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆம்புலன்ஸ் வர தாமதம் ஏற்படக் கூடாது என்பதற்காக போலீசுக்கு தகவல் தெரிவித்து முன்னேற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி ஆம்புலன்ஸ் வரும் வழியில் நெரிசல் ஏற்படாதபடி போலீசார் பார்த்து கொண்டனர். முக்கிய இடங்களில் எல்லாம் போக்குவரத்தை சீரமைக்க அவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் நெல்லை மாவட்டம் அருகே வந்தபோது ஆம்புலன்சில் திடீரென என்ஜின் கோளாறு ஏற்பட்டதை டிரைவர் செந்தில்குமார் உணர்ந்துள்ளார். எனினும் செந்தில்குமார் ஆம்புலன்சை நிறுத்தவில்லை. ஆம்புலன்சை இயக்கியபடியே ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தார். எனவே எக்காரணம் கொண்டும் ஆம்புலன்ஸ் வழியில் நின்று சிறுநீரகம் வர தாமதம் ஆகிவிட கூடாது என்பதற்காக இங்கிருந்து ஒரு கார் அனுப்பி வைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் நெல்லையை வந்தடையும் முன்பே கார் நெல்லை சென்று விட்டது.

எப்போது வேண்டுமானாலும் ஆம்புலன்ஸ் நின்று விடலாம் என்ற நிலையில் நெல்லையில் இருந்து ஆம்புலன்ஸ் பின்னாலேயே கார் வந்தது. ஆம்புலன்ஸ் ஒழுகினசேரி வந்த போது என்ஜின் கோளாறு காரணமாக நடுவழியில் நின்றது. இதனையடுத்து உடனே ஆம்புலன்சில் இருந்து சிறுநீரகம் காருக்கு மாற்றப்பட்டு சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியை வந்தடைந்தது. சரியாக 2.30 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு சிறுநீரகம் கொண்டு வரப்பட்டது. அதாவது 2¼ மணி நேரத்தில் மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறுநீரகம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறுநீரகத்தை வெங்கடேசுக்கு அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் பொருத்தினர்.

விபத்தில் உயிரிழந்த வேல்முருகனின் சிறுநீரகம் தானம் செய்யப்பட்டதால், 2 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. அதாவது, வேல்முருகனின் ஒரு சிறுநீரகம் நாகர்கோவிலில் உள்ள விவசாயிக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரையில் உள்ள ஒருவருக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

Next Story