உசிலம்பட்டி- ஆண்டிப்பட்டி புதிதாக அமைத்த அகல ரெயில் பாதையில் அதிகாரிகள் ஆய்வு


உசிலம்பட்டி- ஆண்டிப்பட்டி புதிதாக அமைத்த அகல ரெயில் பாதையில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 8 Oct 2020 10:45 AM IST (Updated: 8 Oct 2020 10:42 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டி- ஆண்டிப்பட்டி இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகல ரெயில் பாதையில் அதிகாரிகள் டிராலி மூலம் சென்று ஆய்வு செய்தனர்.

உசிலம்பட்டி,

மதுரையில் இருந்து போடி வரை மீட்டர்கேஜ் ரெயில் பாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் இந்த மீட்டர்கேஜ் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றும் பணிகள் கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இதில் மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரை முதலில் அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டி வரை 21 கிலோ மீட்டர் தூரத்தில் அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு அந்தப் பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன. இதனைத் தொடர்ந்து இந்த பாதையை ரெயில்வே தலைமை நிர்வாக அதிகாரி (கட்டுமானம்) ரவீந்திரபாபு, தலைமை பொறியாளர் இளம்பூரணன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டி வரையில் அமைக்கப்பட்டுள்ள அகல ரெயில் பாதையை டிராலியில் சென்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அகல ரெயில் பாதையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரு பெரிய பாலம், 59 சிறு பாலங்களை சோதனை செய்தனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்தப் பாதையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்தப் பாதையில் ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Next Story