வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆதரவு பெறும் கட்சிதான் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் - மாநில தலைவர் முருகன் பேச்சு


வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆதரவு பெறும் கட்சிதான் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் - மாநில தலைவர் முருகன் பேச்சு
x
தினத்தந்தி 8 Oct 2020 11:00 AM IST (Updated: 8 Oct 2020 10:52 AM IST)
t-max-icont-min-icon

வருகிற சட்ட மன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆதரவு பெறும் கட்சிதான் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் பேசினார்.

கல்லல்,

காளையார்கோவில் முன்னாள் யூனியன் தலைவரும், தி.மு.க ஒன்றிய முன்னாள் செயலாளருமான மேப்பல் சக்தி தலைமையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்பா.ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சி காளையார்கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி வரவேற்றார். விழாவில் பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், மாநில துணைத்தலைவரும், பெருங்கோட்ட பொறுப்பாளர் நயினார்நாகேந்திரன், மேப்பல் சக்தி, முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் மார்த்தாண்டன், ஏகத்துவ ஜமாத் தலைவர் வேலூர் இப்ராகீம் உள்பட பலர் பேசினர்.

கூட்டத்தில் மேப்பல் சக்தி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் பா.ஜ.க.வில் இணைந்த பட்டியல் தொகுப்பை பா.ஜ.க. மாநில தலைவர் முருகனிடம் வழங்கி தன்னை பா.ஜ.கவில் இணைத்துக்கொண்டார். தொடர்ந்து கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் முருகன்பேசியதாவது:- கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் தமிழகத்தில் பா.ஜ.க.வினர் பொதுமக்களை சந்தித்து உணவு பொருட்களை முதன் முதலில் வழங்கியது திருப்பு முனையாகும். கொரோனா காலக்கட்டத்தில் சுமார் 1 கோடி மக்களை சந்தித்து அவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி உள்ளோம். தற்போது தமிழகத்தில் மற்ற கட்சிகளில் இருந்தும், பிரபல தொழில் அதிபர்கள், சினிமாவைச் சேர்ந்த பிரமுகர்கள் என அதிக நபர்கள் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர்.

தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் பா.ஜ.கவில் இணைந்து வருவதால் வருகிற சட்ட மன்ற தேர்தலின் போது வெற்றி பெற்று சட்ட மன்றத்தில் அதிகஅளவு எண்ணிக்கையில் பா.ஜ.க. உறுப்பினர்கள் அமருவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. கடந்த 6 ஆண்டுகளில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டங்கள் அனைத்தும் தமிழகத்திலும் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசின் சார்பில் இலவசமாக 35 கிலோ அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் தீபாவளி பண்டிகை வரை கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்தியாவை பொறுத்தமட்டில் தீர்க்க முடியாமல் இருந்த காஷ்மீர் பிரச்சினை மற்றும் அயோத்தி பிரச்சினையை மோடி தீர்த்து வைத்துள்ளார். இதுதவிர இஸ்லாமிய பெண்களை பெரிதும் பாதித்த முத்தலாக் சட்டத்தை நிறுத்தி அந்த பெண்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். ராமர் கோவில் பிரச்சினையில் சரியான முடிவை எடுத்தார்.

தமிழகத்தில் விவசாய சட்டம் மற்றும் இந்தி மொழி குறித்து தி.மு.க. மக்களிடம் ஒரு மாயையை ஏற்படுத்தி வருகிறது. முதலில் தமிழக மக்கள் இந்தி மொழி படிக்கக்கூடாது என கூறும் தி.மு.க.வினர் அவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி மொழியை நீக்கட்டும். அதன் பின்னர் தமிழக மக்களிடம் அவர்களின் கருத்தை தெரிவிக்கலாம். இதுதவிர வேளாண் மசோதா குறித்து முழுமையான தகவலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிந்து கொள்ளலாம். அந்த திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து அதில் அரசியல் செய்கிறார். சமீபத்தில் சென்னை வந்த மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலாசீதாராமன் விவசாய பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளை சந்தித்து வேளாண்மை மசோதா குறித்து கருத்து கேட்டபோது இத்திட்டம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார், அதை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் முழுமையாக சென்றடையவில்லை என்று தி.மு.க. பொய் பிரசாரம் செய்து வருகிறது. மத்திய அரசின் திட்டங்களை பெறுவதில் தமிழகம் தான் முன்னோடியாக உள்ளது. விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கும் பணம் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செல்கிறது. வருகிற சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க.வால் வெற்றி பெறமுடியாது. பா.ஜ.க. ஆதரவுபெறும் கட்சிதான் இனி ஆட்சியில் அமர முடியும். தி.மு.க. இனி தமிழகத்தில் ஒருபோதும் ஆட்சியை பிடிக்க முடியாது. அதேபோல் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆகும் கனவும் ஒருபோதும் பலிக்காது. அ.தி.மு.க.வில் சட்ட மன்ற தேர்தலுக்காக முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பா.ஜ.க கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப.நாகராஜன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சுப்பராம், சொக்கலிங்கம், மாவட்ட பார்வையாளர் ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியன், மாநில செயலாளர் புரட்சி கவிதாசன், ஒன்றிய தலைவர்கள் பில்லப்பன், மயில்சாமி, பா.ஜ.க சார்பு அணி தேசிய செயற்குழு உறுப்பினர் விஸ்வநாதகோபாலன், மாநில நிர்வாகி ஆதினம், மாவட்ட செயலாளர் நாகராஜன், சிவானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நல பிரிவு மாவட்ட தலைவர் கோவிந்தாரஜ், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் கணேஷ்ராம், வக்கீல் அணி மாவட்ட செயலாளர் முருகேசன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் பிரான்சிஸ், காரைக்குடி நகர் செயலாளர் மணிகண்டன், தமிழ் வளர்ச்சி பிரிவு ராமநாதன், முன்னாள் மாவட்ட தலைவர் சிதம்பரம், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ஜோதிராஜ், காரைக்குடி நகர தலைவர் சந்திரன், மானாமதுரை கிழக்கு ஒன்றிய தமிழ் வளர்ச்சி பிரிவு இளங்கோவன், மானாமதுரை மேற்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் மாரிமுத்து, மாவட்ட இளைஞரணி தலைவர் நாகேஸ்வரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அஜீத்குமார், மாவட்ட துணைத்தலைவர் மயில்வாகனன், இளைஞரணி துணைத்தலைவர் செல்வா, பொதுச்செயலாளர் பிரபாகரன், பொதுச்செயலாளர் ராஜகதிரவன், இளைஞரணி பொருளாளர் கவுதம், உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி நடைபெற்ற இடம் போதிய அளவு இல்லாததால் பெரும்பாலான வர்கள் அருகில் இருந்த சொர்ணகாளீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் அமர்ந்து நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.

Next Story