ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு மின்னணு விற்பனை கருவிகள் வினியோகம் - கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்


ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு மின்னணு விற்பனை கருவிகள் வினியோகம் - கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்
x
தினத்தந்தி 8 Oct 2020 4:45 AM GMT (Updated: 8 Oct 2020 5:37 AM GMT)

பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கு புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மின்னணு கருவிகளை ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்.

ராமநாதபுரம்,

தமிழ்நாடு அரசு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் முறைகேடுகள் ஏற்படாமல் தடுத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் முழுமையாக சென்றடைவதை உறுதி செய்திடும் நோக்கில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கைரேகைப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் உள்ள மின்னணு விற்பனை முனைக் கருவியில் கைரேகை பதிவு மென்பொருள் புதிதாக தற்பொழுது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களது மின்னணு குடும்ப அட்டையில் இடம்பெற்ற நபர்களில் யாரேனும் ஒருவர் நேரில் சென்று அவரது கைரேகையினை பதிவு செய்து பதிவின் அடிப்படையில் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

அவ்வாறு கைரேகை பதிவு ஏதோ ஒரு நிலையில் கருவியில் ஏற்காத பட்சத்தில் ஆதார் அட்டையை பயன்படுத்தி ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் அல்லது குடும்ப அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசி வழியாக குறிப்பிட்ட நேரத்திற்கு பயன்பாட்டில் கொள்ளும் ஒரு முறை கடவுச்சொல் ஆகியவற்றை பயன்படுத்தி அத்தியாவசியப் பொருட்கள் பெற்றுக் கொள்ளலாம்.

உடல்நலக் குறைபாடு அல்லது வயது மூப்பு காரணமாக ரேஷன் கடைக்கு சென்று உணவுப் பொருட்கள் பெற இயலாத அட்டைதாரர்கள் அது தொடர்பான அங்கீகாரச் சான்றினை பூர்த்தி செய்து ரேஷன்கடைக்காரர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அக்கோரிக்கையின் உண்மை தன்மையினை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட நபர் வாயிலாக உணவுப் பொருட்கள் பெற அனுமதிக்கப்படுவர். இந்த வசதியினை பயன்படுத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்ட நபர் உணவுப்பொருள் பெறுவதற்கு யாருக்காக பொருள் வாங்க உள்ளாரோ அவருடைய குடும்ப அட்டை மற்றும் குடும்ப அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசியினை தவறாது எடுத்துச் செல்ல வேண்டும். பதிவு செய்யப்பட்ட கைபேசியில் பெறப்பட்ட ஒருமுறை கடவுச்சொல் அடிப்படையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும்.

அதன்படி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் கைரேகைப் பதிவு மென்பொருள் பதிவேற்றம் செய்யப்பட்ட மின்னணு விற்பனை முனைக் கருவிகளை ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு வழங்கினார்.இந்த நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டோபர் ஜெயராஜ், பொதுவினியோகத் திட்ட துணை பதிவாளர் ராஜவேலன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story