தனியார் தேயிலை தொழிற்சாலைகளை கண்டித்து - கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
தனியார் தேயிலை தொழிற்சாலைகளை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
ஊட்டி,
ஊட்டி அருகே எப்பநாடு, கடநாடு, நுந்தளா, சின்ன குன்னூர் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகளிடம் இருந்து தனியார் தொழிற்சாலைகள் பச்சை தேயிலையை கொள்முதல் செய்து வருகின்றன. ஆனால் விவசாயிகள் தரமான பச்சை தேயிலையை வழங்கவில்லை என்றும், தரமில்லாதவற்றை கொள்முதல் செய்ய முடியாது என்றும் தொழிற்சாலைகள் அறிவித்து உள்ளன. இதனால் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் உள்ள பச்சை தேயிலையை பறிக்க முடியாமலும், அவற்றை தனியார் தொழிற்சாலைகளுக்கு வழங்க முடியாமலும் உள்ளனர். இதனால் பச்சை தேயிலை முற்றி போகும் நிலை உள்ளது.
இந்த நிலையில் பச்சை தேயிலையை கொள்முதல் செய்ய மறுக்கும் தனியார் தொழிற்சாலைகளை கண்டித்து நேற்று ஊட்டி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்துவிட்டு சென்றனர்.
அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
நீலகிரியில் பச்சை தேயிலை பறித்து, 119 தனியார் தொழிற்சாலைகளுக்கு விவசாயிகள் வழங்குகின்றனர். ஆனால் கடந்த ஒரு வாரமாக எந்தவொரு தனியார் தொழிற்சாலையும் விவசாயிகளிடம் இருந்து பச்சை தேயிலை கொள்முதல் செய்யவில்லை. முதல் தர பச்சை தேயிலையை மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்து உள்ளனர். இரண்டாம் தர பச்சை தேயிலையை கொள்முதல் செய்ய மறுக்கின்றனர்.
தனியார் தொழிற்சாலைகளில் முதல் தர பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.30, இரண்டாம் தர பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.27 என விலை கிடைக்கிறது. பச்சை தேயிலைக்கு உரிய விலை இருந்தும், அதனை தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளோம். இதனால் எங்களது வாழ்வாதாரம் மீண்டும் கேள்விக்குறியாகி உள்ளது.
இன்கோசர்வ் கீழ் செயல்படும் கூட்டுறவு தொழிற்சாலைகளில் பச்சை தேயிலை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. எனவே மாவட்ட கலெக்டர் தலையிட்டு தனியார் தொழிற்சாலைகள் விவசாயிகளிடம் இருந்து அனைத்து தர பச்சை தேயிலையையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story