ஊட்டி அருகே பரிதாபம்: திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை - காரணம் என்ன? போலீஸ் விசாரணை


ஊட்டி அருகே பரிதாபம்: திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை - காரணம் என்ன? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 8 Oct 2020 11:45 AM IST (Updated: 8 Oct 2020 11:40 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே திருமணம் ஆகி 4 மாதங்களே ஆன நிலையில் புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சோலூரில் உள்ள ஒரு தனியார் தேயிலை எஸ்டேட்டில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் தயானந்தன்(வயது 31). இவர் எஸ்டேட் நிர்வாகம் அளித்த குடியிருப்பில் தங்கி இருந்தார். இதற்கிடையே தயானந்தனுக்கும், மேலூர் ஒசட்டி கிராமத்தை சேர்ந்த வினோதினி(21) என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. பின்னர் கணவன்-மனைவி 2 பேரும், மேற்கண்ட தனியார் தேயிலை எஸ்டேட் குடியிருப்பில் தங்கி இருந்தனர். மேலும் தினமும் வழக்கம்போல் தயானந்தன் வேலைக்கு சென்று வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊழியர்கள் தயானந்தன் வசிக்கும் வீடு பூட்டி கிடப்பதை பார்த்தனர். காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அவர்கள் சந்தேகம் அடைந்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தயானந்தன் மற்றும் அவரது மனைவி வினோதினி ஆகியோர் கயிறு மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், புதுமந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட கணவன்-மனைவியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டனர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஊட்டி ஆர்.டி.ஓ. (பொறுப்பு) குதுரத்துல்லாவும் விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் முடிந்து 4 மாதங்களே ஆன நிலையில் புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story