ஆழியாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு


ஆழியாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 8 Oct 2020 12:00 PM IST (Updated: 8 Oct 2020 11:44 AM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையில் இருந்து பழைய, புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதை தவிர இந்த அணை மூலம் பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் கோவை, குறிச்சி, குனியமுத்தூர் கூட்டுக்குடிநீர் திட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் ஒப்பந்தப்படி அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பொள்ளாச்சி, வேட்டைக்காரன்புதூர், சேத்துமடை, ஆழியாறு ஊட்டுக் கால்வாய்களில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ., சப்-கலெக்டர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் ராஜாமணி தண்ணீரை திறந்து வைத்தார். அதை தொடர்ந்து மலர்தூவி அனைவரும் தண்ணீரை வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் தாசில்தார்கள் வெங்கடாச்சலம், தணிகவேல், ஆனைமலை ஒன்றிய குழு தலைவர் சாந்தி கார்த்திக், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் லீலாவதி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சுந்தரம், கார்த்திக் அப்புசாமி, கோவை தெற்கு மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் சாந்தலிங்ககுமார், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் மகாலிங்கம், கோட்டூர் நகர துணை செயலாளர் காளிங்கராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மாவட்ட கலெக்டர் ராஜாமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு கொடுக்க கூடிய தண்ணீர் பொதுப்பணித்துறை என்ன வரையறை உள்ளதோ? அந்த வரையறையின் அடிப்படையில் தண்ணீர் வழங்கி வருகின்றனர். சிறுவாணியின் நிலை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அரசு முறையான நடவடிக்கை எடுத்து வருகிறது. வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம் பகுதியில் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.5 கோடி அளவில் கழிவுநீரை சுத்திகரிக்க திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்ததும் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story