ரூ.1 கோடி கடன் தருவதாக கூறி தம்பதியிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது
அவினாசியில் ரூ.1 கோடி கடன் தருவதாக கூறி, தம்பதியிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்தவரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
அவினாசி,
சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் ராஜ் (வயது 38). லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெனிபர். தொழிலை விரிவுபடுத்துவது தொடர்பாக தம்பதி விவாதித்துள்ளனர். இந்த நிலையில் ரூ. 1 கோடி வரை கடன் வழங்கப்படும் என்று செல்போன் எண்ணுடன் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் விளம்பரம் வெளியாகி இருந்தது. இதையடுத்து அந்த எண்ணில் ஜெனிபர் தொடர்பு கொண்டு பேசிய போது எதிர்முனையில் பேசியவர் ரூ.1 ஒரு கோடி கடன் பெற பதிவு தொகை ரூ.4 லட்சத்துடன்அவினாசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பிரபல ஓட்டலுக்கு வருமாறும், பதிவு தொகை ரூ.4 லட்சத்தை செலுத்திவிட்டு நீங்கள் கேட்ட பணத்தை வாங்கி செல்லலாம் என்று தெரிவித்துள்ளார்.
எனவே கணவன்-மனைவி இருவரும் சென்னையிலிருந்து அவர் குறிப்பிட்ட ஓட்டலுக்கு வந்து அந்த குறிப்பிட்ட நபரிடம் ரூ. 4 லட்சத்தைகொடுத்துள்ளனர். அப்போது பணம் கொடுத்த ஆசாமி, ஒரு சூட்கேசை தம்பதியிடம் கொடுத்து அதில் ரூ.55 லட்சம் உள்ளது என்றும், மீதி பணத்தை அசல் பத்திரத்துடன் கொண்டுவந்து கொடுத்துவிட்டுவாங்கிச் செல்லலாம் என்று கூறிவிட்டு அங்கிருந்து தனது காரில் சென்றுவிட்டார்.
பின்னர் தம்பதி பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதில் குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதியிடம் மோசடி செய்தவர் குறித்து விசாரித்தனர். விசாரணையில் மோசடியில் ஈடுபட்டவர் கோவை கணபதி மணியகாரம்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்கிற ஹரிஷ் ஆச்சாரியா (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஹரீஸ் ஆச்சாரியாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ஹரீஸ் ஆச்சாரியாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் விஜய கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்படி ஹரிஷ் ஆச்சார்யா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு சிறையில் உள்ள அவரிடம் போலீசார் வழங்கினர்.
Related Tags :
Next Story