பரீட்சார்த்த முறையில் பள்ளிகளை திறந்துள்ளோம் நாராயணசாமி விளக்கம்


பரீட்சார்த்த முறையில் பள்ளிகளை திறந்துள்ளோம் நாராயணசாமி விளக்கம்
x
தினத்தந்தி 9 Oct 2020 4:29 AM IST (Updated: 9 Oct 2020 4:29 AM IST)
t-max-icont-min-icon

பரீட்சார்த்த முறையில் தான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. குணமடைந்தோருக்கு வேறு சில உபாதைகள் வருவதாக கூறப்படுகிறது. எனவே குணமடைந்தவர்களை தொடர்ச்சியாக வேறு நோய்கள் உள்ளனவா? என்று கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களது மன அழுத்தத்தை போக்கிட ஆலோசனைகள் வழங்கவும் கூறியுள்ளேன்.

அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளை நான் தொடர்பு கொண்டு பேசினேன். அவர்கள் தங்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப் படுவதாக தெரிவித்தனர். சத்தான உணவும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. நாள்பட்ட வியாதிகள் இருப்பவர்கள் தற்போது கவனமாக இருக்கவேண்டும்.

பரீட்சார்த்த முறை

புதுவையில் பள்ளிகள் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர்களை சந்தித்து போக்கிடத்தான் வழி காணப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்கள் போதிய இணையதள வசதி இல்லாததால் பாடங்களை சரிவர கவனிக்க முடியவில்லை. பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யத்தான் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வருகிறார்கள்.

இதனை பரீட்சார்த்த முறையில்தான் தொடங்கியுள்ளோம். ஆனால் சிலர் இதை வைத்து அரசியல் செய்கிறார்கள். கர்நாடகா, தெலுங்கானா, மராட்டிய மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு நடந்து வருகின்றன. இப்போது பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டால் எங்கள் உத்தரவினை மறுபரிசீலனை செய்வோம்.

அரசுக்கு களங்கம் கற்பிக்கும் வேலையை சிலர் செய்கிறார்கள். பள்ளிகள் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். மாணவர்கள் வருகிற மார்ச் மாதம் பொதுத்தேர்வு எழுத வேண்டும். அதற்கு தயாராக வேண்டும். இதையெல்லாம் கருத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story