புறவழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி வயலுக்குள் இறங்கி மண்சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டம் - திருவையாறில், விவசாயிகள் நடத்தினர்


புறவழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி வயலுக்குள் இறங்கி மண்சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டம் - திருவையாறில், விவசாயிகள் நடத்தினர்
x
தினத்தந்தி 9 Oct 2020 4:15 AM IST (Updated: 9 Oct 2020 4:51 AM IST)
t-max-icont-min-icon

புறவழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி வயலுக்குள் இறங்கி மண்சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தை திருவையாறில், விவசாயிகள் நடத்தினர்.

திருவையாறு,

திருவையாறு நகர பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாள்தோறும் திருவையாறு நகர மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறி வருகிறார்கள். எனவே இருக்கக்கூடிய சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் பெரம்பலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் சாலையை விரிவாக்கம் செய்யாமல் 2019-ம் ஆண்டு திருவையாறை ஒட்டியுள்ள கண்டியூர், அரசூர் திருப்பூந்துருத்தி, காட்டுக்கோட்டை சாலை உள்ளிட்ட 6 கிராமங்களில் 100 ஏக்கர் விளை நிலத்தை கையகப்படுத்தி திருவையாறு பகுதிக்கு புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த முற்பட்டனர். இதற்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

தற்போது விவசாயிகளுக்கு எந்த ஒரு அறிவிப்பும் செய்யாமல் சாலை பணிக்காக விளைநிலங்களில் குறியீடு அமைப்பது, கொடி நடுவது உள்ளிட்ட பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதனை கண்டிக்கும் விதமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள், திருவையாறை அடுத்த கண்டியூர் வருவாய் கிராமம் காட்டுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள வயல்களில் இறங்கி கருப்பு கொடியை கட்டி கையில் மண்சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட துணைசெயலாளர் சுகுமாறன் தலைமையில் நடந்தது. இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்குப் பிறகும் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தினால் சாலைமறியல் உள்ளிட்ட பெரிய அளவிலான போராட்டங்களை நடத்தப்போவதாக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் தெரிவித்தனர்.

Next Story