குடவாசல் அருகே பயங்கரம்: ஊராட்சி தலைவர் வெட்டிக்கொலை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


குடவாசல் அருகே பயங்கரம்: ஊராட்சி தலைவர் வெட்டிக்கொலை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Oct 2020 4:15 AM IST (Updated: 9 Oct 2020 5:00 AM IST)
t-max-icont-min-icon

குடவாசல் அருகே ஊராட்சி தலைவரை வெட்டிக்கொன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

குடவாசல்,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள மணவாளநல்லூர் ஊராட்சி தலைவராக இருந்தவர் கணேசன்(வயது 50). தி.மு.க.வை சேர்ந்த இவர் நேற்று இரவு 8 மணி அளவில் எரவாஞ்சேரி கடைத்தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கடைத்தெரு இருளில் மூழ்கியிருந்தது. அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர், திடீரென கணேசனை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த கணேசன் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் திடீரென ஒருவரை அரிவாளால் மர்ம நபர்கள் வெட்டியதை கண்ட மக்கள் அங்கிருந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். பின்னர் கணேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கணேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து எரவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை வெட்டிக்கொன்ற மர்ம நபர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? முன்விரோதம் காரணமாக திட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த கொலையை செய்தார்களா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் ஊராட்சி தலைவர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குடவாசல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story