மானூர் அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு போலீஸ்காரர் உள்பட 6 பேர் மீது வழக்கு


மானூர் அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு போலீஸ்காரர் உள்பட 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 9 Oct 2020 5:15 AM IST (Updated: 9 Oct 2020 5:15 AM IST)
t-max-icont-min-icon

மானூர் அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக போலீஸ்காரர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மானூர்,

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள தென்கலம்புதூரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 49) கூலி தொழிலாளி. இவருடைய மகன் முத்துக்குமார். இவர் அதே ஊரைச் சேர்ந்த முருகையா மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கருப்பசாமி, முத்துக்குமார் ஆகியோர் தென்கலம்புதூர் பஜாரில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த முருகையா, அவரது தம்பி ஆறுமுகம் உள்பட 6 பேர் சேர்ந்து தகராறு செய்தனர்.

இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் மற்றும் உறவினர்கள் சேர்ந்து முத்துக்குமாரை ஹெல்மெட்டால் தாக்கியும், கருப்பசாமியை அரிவாளால் வெட்டியும் காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த கருப்பசாமி, முத்துக்குமார் ஆகியோர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

6 பேர் மீது வழக்கு

இதுகுறித்த புகாரின் பேரில் மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது நிசார் அகமது, முருகையா, ஆறுமுகம், உறவினர்களான செல்வி, முத்துமாரி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார். இதில் ஆறுமுகம் போலீஸ்காரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story