குன்னம் அருகே, ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை -100 நாள் திட்டத்தில் வேலை வழங்க கோரிக்கை


குன்னம் அருகே, ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை -100 நாள் திட்டத்தில் வேலை வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 9 Oct 2020 3:15 AM IST (Updated: 9 Oct 2020 7:21 AM IST)
t-max-icont-min-icon

குன்னம் அருகே, 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பெரிய வெண்மணி ஊராட்சியில் உள்ள சின்ன வெண்மணி கிராமத்தில் சுமார் 1,500 பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் எந்த பணியும் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதற்கு முன்பு ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் வேலை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா தொற்று காலத்தில் வருவாய் இல்லாமல் சிரமப்படுவதாகவும், சின்ன வெண்மணி கிராமத்திற்கு தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும் புகார் தெரிவித்து, சின்ன வெண்மணி கிராம மக்கள் ஒன்று திரண்டு பெரிய வெண்மணி கிராமத்திற்கு வந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர், முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, உடனடியாக ஒன்றிய அலுவலகத்தில் பேசி வேலை பெற்று தருவதாக, அவர் உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் ஒரு வார காலத்திற்குள் சின்ன வெண்மணி கிராம மக்களுக்கு வேலை வழங்கவில்லை என்றால், அடுத்த வாரம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story