சமயபுரம் அருகே, வாய்க்காலில் தவறி விழுந்த அக்காள்-தம்பி கதி என்ன? - தேடும் பணி தீவிரம்


சமயபுரம் அருகே, வாய்க்காலில் தவறி விழுந்த அக்காள்-தம்பி கதி என்ன? - தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 9 Oct 2020 4:00 AM IST (Updated: 9 Oct 2020 7:21 AM IST)
t-max-icont-min-icon

சமயபுரம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்த அக்காள்-தம்பி கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சமயபுரம்,

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். டாக்சி டிரைவர். இவரது மனைவி அனிதா. இவர் திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு தர்ஷினி(வயது 6) என்கிற மகளும், நரேன் (4) என்ற மகனும் உள்ளனர். ரவிச்சந்திரனும், அனிதாவும் வழக்கம்போல நேற்று வேலைக்கு சென்று விட்டனர். அனிதாவின் தாய் தாமரை 2 குழந்தைகளையும் கவனித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை குழந்தைகள் இருவரும் இயற்கை உபாதை கழிக்க செல்லவேண்டும் என்று பாட்டியிடம் கூறிவிட்டு அப்பகுதியில் உள்ள பெருவளை வாய்க்கால் அருகே சென்றுள்ளனர். பின்னர் கை, கால்களை கழுவுவதற்காக வாய்க்காலில் இறங்கியபோது தவறி தண்ணீரில் விழுந்தனர்.

இதனை அந்தப் பகுதியில் டீக்கடை வைத்திருக்கும் ஒருவர் பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே சமயபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில், நிலைய அலுவலர் சக்திவேல் மூர்த்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாய்க்காலில் இறங்கி குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வாய்க்காலில் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் குழந்தைகளை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

மேலும், சம்பவ இடத்திற்கு வருவாய் துறையினர் மற்றும் சமயபுரம் போலீசார் வந்தனர். பின்னர் முக்கொம்பில் உள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக தண்ணீரை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டனர். தண்ணீர் வரத்து குறைவதற்கு குறைந்தபட்சம் 8 மணி நேரம் ஆகும் என கருதப்பட்டதால், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களும் வாய்க்காலில் இறங்கி மின்விளக்கு, செல்போன் டார்ச் உதவியுடன் குழந்தைகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த குழந்தைகளின் பெற்றோரும் விரைந்து வந்தனர். அவர்கள் மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டனர். அவர்களை கிராம மக்கள் ஆறுதல் படுத்தினர்.

Next Story