மாவட்டத்தில் கூடுதலாக 10 ஆயிரம் படுக்கை வசதிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் - கொரோனா ஆய்வுக்கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி அறிவுறுத்தல்


மாவட்டத்தில் கூடுதலாக 10 ஆயிரம் படுக்கை வசதிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் - கொரோனா ஆய்வுக்கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 8 Oct 2020 10:15 PM GMT (Updated: 9 Oct 2020 2:06 AM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் கூடுதலாக 10 ஆயிரம் படுக்கை வசதிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று கொரோனா ஆய்வுக்கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி அறிவுறுத்தினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அதிகாரிகள் ஆய்வு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. தொழில் துறை வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய நிர்வாக துணைத்தலைவரும் தர்மபுரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான நீரஜ் மிட்டல் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆய்வு நடத்தினார். கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஸ்குமார், உதவி கலெக்டர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரி நீரஜ் மிட்டல் பேசியதாவது:- மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிதல், கைகழுவுதல், கிருமிநாசினி பயன்படுத்துதல், கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் போன்றவற்றை பயன்படுத்துதல் ஆகியவற்றை முழுமையாக பின்பற்ற உரிய விழிப்புணர்வு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை, மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மேலும் 10 ஆயிரம் படுக்கை வசதிகளை கூடுதலாக தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க செல்போன் செயலியை உருவாக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுக்குரியது.இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் ரகமத்துல்லாகான், சங்கர், அஜய் சீனிவாசன், ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமைதிட்ட இயக்குனர் ஆர்த்தி, கூட்டுறவுசங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கண்ணன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாசசேகர், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, அரசு மருத்துவகல்லூரி டீன் இளங்கோவன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story