மானாமதுரை பகுதியில் அறுவடையாகும் சின்ன வெங்காயம் கிலோ ரூ.15-க்கு விலை போவதால் விவசாயிகள் வேதனை - பட்டறை அமைத்து இருப்பு வைக்கிறார்கள்


மானாமதுரை பகுதியில் அறுவடையாகும் சின்ன வெங்காயம் கிலோ ரூ.15-க்கு விலை போவதால் விவசாயிகள் வேதனை - பட்டறை அமைத்து இருப்பு வைக்கிறார்கள்
x
தினத்தந்தி 9 Oct 2020 3:30 AM IST (Updated: 9 Oct 2020 9:04 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை பகுதியில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி காரணமாக ரூ.15-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள். எனவே பட்டறை அமைத்து இருப்பு வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் தற்போது சின்ன வெங்காயத்தை பயிரிட்டு, அறுவடை செய்து வருகின்றனர்.

சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்த நிலையில் அறுவடை செய்த வெங்காயத்தை விற்பனைக்கு அனுப்பினால் பயிட்ட செலவு தொகையை கூட எடுக்க முடியாமல் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதையடுத்து தற்போது அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தை மொத்தமாக அந்த பகுதியிலேயே பட்டறை அமைத்து இருப்பு வைத்து, சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்வு ஏற்பட்ட பின்னர் விற்பனைக்கு அனுப்பலாம் என முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து அன்னியேந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி கூறியதாவது:-

எனது விளைநிலத்தில் சுமார் 3 ஏக்கர் வரை வெங்காயம் பயிரிடப்பட்டது. இதை பயிரிடுவதற்கு இடுபொருள் செலவு, ஆட்கள் கூலி என ஒரு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் வரை செலவு ஏற்பட்டது. அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய அனுப்ப நினைத்தால் தற்போது கிலோ ரூ.15 வரை மட்டும் வியாபாரிகள் எங்களிடம் கொள்முதல் செய்கின்றனர். இதனால் நாங்கள் செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே சந்தையில் வெங்காயம் விலை உயரும் வரை இங்கு அறுவடை செய்யப்பட்ட வெங்காயத்தை இருப்பு வைக்க முடிவு செய்து பனை மர சட்டம், நாணல் புதர்கள், வைக்கோல், சோகை தட்டை ஆகியவைற்றை வைத்து பட்டறை அமைத்து, அதில் இந்த வெங்காயத்தை இருப்பு வைக்க உள்ளோம். இந்த பட்டறை அமைக்க ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம்.

கடந்த ஆண்டு விலை குறைந்த காலக்கட்டத்தில் இவ்வாறு பட்டறை அமைத்து வெங்காயத்தை இருப்பு வைத்து 6 மாத காலத்திற்கு பின்னர் விலை உயர்வு ஏற்பட்ட நிலையில் விற்பனைக்கு அனுப்பியபோது கிலோ ரூ.60 வரை விற்பனையானது. இந்த ஆண்டும் அவ்வாறு இருப்பு வைக்க இந்த முயற்சியை எடுத்துள்ளோம். இந்த முறையில் இருப்பு வைக்கப்படும் வெங்காயம் விதை பயன்பாட்டிற்கும் உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story