அதிர்வுகள் உள்ளதா? என அறிய பாம்பன் தூக்குப்பாலம் வழியாக 2 மணி நேரம் ரெயிலை இயக்கி சோதனை


அதிர்வுகள் உள்ளதா? என அறிய பாம்பன் தூக்குப்பாலம் வழியாக 2 மணி நேரம் ரெயிலை இயக்கி சோதனை
x
தினத்தந்தி 9 Oct 2020 3:45 AM IST (Updated: 9 Oct 2020 9:04 AM IST)
t-max-icont-min-icon

அதிர்வுகள் உள்ளதா? என அறிய பாம்பன் தூக்குப்பாலம் வழியாக 22 பெட்டிகளுடன் 2 மணி நேரம் ரெயிலை இயக்கி நேற்று சோதனை நடத்தப்பட்டது.

ராமேசுவரம், 

ராமநாதபுரம் மாவட்டத்துடன் ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள நூற்றாண்டுகளை கடந்த பாம்பன் ரெயில்வே பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக அதில் சென்னை ஐ.ஐ.டி. குழுவானது 70-க்கும் மேற்பட்ட இடங்களில் சென்சார் கருவிகள் பொருத்தி உள்ளது. கடந்த 2-ந் தேதி ராமேசுவரத்தில் இருந்து சென்னை புறப்பட்டு சென்ற சேது எக்ஸ்பிரஸ் தூக்குப்பாலத்தை கடந்தபோது இந்த சென்சார் கருவிகளில் இருந்து சத்தம் வந்துள்ளது.

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தூக்குப்பாலத்தில் ஐ.ஐ.டி. குழுவினர் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது தூக்குப்பாலத்தில் சென்சார் கருவிகளில் பழுது இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து புதிய சென்சார் கருவிகளை தூக்குப்பாலத்தில் ஐ.ஐ.டி. குழுவினர் பொருத்தினர். இந்த நிலையில் பாம்பன் தூக்குப்பாலத்தின் உறுதித்தன்மையை அறியவும், சென்சார் கருவிகளின் செயல்பாடு சரியாக உள்ளதா? என்பதை கண்டறியவும் நேற்று பகல் 11 மணி அளவில் ராமேசுவரத்தில் இருந்து 22 பெட்டிகளுடன் தூக்குப்பாலம் வழியாக பாம்பன் பாலத்தில் ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இந்த ரெயிலை முன்னும், பின்னும் தூக்குப்பாலம் வழியாக இயக்கி சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஐ.ஐ.டி.யின் தொழில்நுட்ப வல்லுனர் ஜஸ்டின் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் தூக்குப்பாலத்தில் பொருத்தப்பட்ட சென்சார் கருவிகளில் இருந்து ஏதேனும் சத்தம் வருகிறதா, அதிர்வுகள் உள்ளதா? என்பது குறித்து தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர்.

இதுபற்றி ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, “பயணிகள் இல்லாமல் 22 பெட்டிகளுடன் தூக்குப்பாலத்தில் பலமுறை ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளது. இந்த சோதனையின் போது தூக்குப்பாலத்தில் எந்த ஒரு சத்தமும், அதிர்வும் ஏற்படவில்லை. ஐ.ஐ.டி. குழு அறிக்கை கொடுத்த பின்பு பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலம் வழியாக விரைவில் வழக்கம்போல் பயணிகளுடன் ரெயில் போக்குவரத்து நடைபெறும்” என்றார்.

Next Story