புதிதாக 86 பேருக்கு நோய் தொற்று கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழப்பு


புதிதாக 86 பேருக்கு நோய் தொற்று கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 9 Oct 2020 4:00 AM IST (Updated: 9 Oct 2020 9:41 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் நேற்று 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல், 2 பேர் உயிரிழந்தனர்.

மதுரை,

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முழுவதுமாக அதிகரிக்காமல் நாளொன்றுக்கு 10 முதல் 15 பேர் வரை கூடுதலாக பாதிக்கப்படுகிறார்கள்.

அந்த வகையில் மதுரையில் நேற்று புதிதாக 86 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 66 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய பாதிப்புடன் சேர்த்து மதுரையில் இதுவரை 17 ஆயிரத்து 214 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 67 பேர் நேற்று குணம் அடைந்தனர். அவர்களில் 50 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களுடன் சேர்த்து, மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 714 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

மதுரையில் கொரோனா பாதிப்புடன் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயது ஆண் ஒருவர் நேற்று உயிரிழந்தார். இதுபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்புடன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 83 வயது முதியவரும் உயிரிழந்தார். இதன் மூலம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 395 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், “கடந்த காலங்களில் இருந்ததை விட மதுரையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அனைவருக்கும் உயிர்காக்கும் மருந்துகள் மூலம் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் சிகிச்சையில் இருப்பவர்களும் குணம் அடைந்து வீட்டிற்கு செல்வார்கள். மற்ற மாவட்டங்களை காட்டிலும் மதுரையில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது

மதுரையில் இதுவரை 3½ லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தினமும் 3 ஆயிரம் வரை சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்படுகிறது. இதுபோல், தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது” என்றனர்.

Next Story