உசிலம்பட்டி அருகே கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி குழந்தையுடன் பெண் தர்ணா
கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கணவரின் வீட்டு முன்பு குழந்தையுடன் பெண் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே உள்ளது சந்தைப்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் ராமர் மகன் ராம்கணேஷ்(வயது 29). இவர் சமயநல்லூரை சேர்ந்த மின்னல் கொடி (22) என்பவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த காதல் திருமணம் ராம் கணேஷ் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதனால் இரு குடும்பத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து கணவன்-மனைவி 2 பேரும் பிரிந்து வாழ்ந்தனர். குழந்தை மின்னல்கொடியுடன் இருந்தது. இந்தநிலையில் ராம்கணேஷ் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த மின்னல்கொடி அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் மின்னல்கொடி தனது குழந்தை, தாயார் ஆகியோருடன் சந்தைப்பட்டியில் உள்ள கணவன் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் நேற்று ஈடுபட்டார். அப்போது தன்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என கோரினார். இதனால் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மின்னல் கொடி கூறும்போது, ராம்கணேசை காதலித்து திருமணம் செய்துகொண்டேன். 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் நாங்கள் பிரிந்து வாழ்ந்து வந்தோம். இருப்பினும் ராம்கணேஷ் என்னையும், குழந்தையையும் அடிக்கடி பார்த்து பேசி வந்தார். திடீரென்று சில மாதங்களாக அவர் எங்கள் வீட்டிற்கு வரவில்லை. அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. எங்களை சேர்த்து வைக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த போராட்டம் நடத்தி உள்ளேன் என்றார். இதுகுறித்து தகவலறிந்த சிந்துபட்டி போலீசார், மின்னல்கொடியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story