தூக்குப்போட்டு தற்கொலை: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயி கைது


தூக்குப்போட்டு தற்கொலை: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயி கைது
x
தினத்தந்தி 9 Oct 2020 4:00 AM IST (Updated: 9 Oct 2020 10:01 AM IST)
t-max-icont-min-icon

வாணாபுரம் அருகே மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விவசாயி கைதுசெய்யப்பட்டார்.

வாணாபுரம்,

வாணாபுரம் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்துவந்தார். கடந்த 6-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து மாணவியின் தாய் வெறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மாணவியை அதேப்பகுதியை சேர்ந்த விவசாயி சேகர் என்ற சாரங்கநாதன் (வயது 45) என்பவர் அடிக்கடி கிண்டல் செய்து வந்துள்ளார். மேலும் கையை பிடித்து இழுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி மாலை மாணவியை, சேகர் அவருடைய நிலத்தில் உள்ள மாட்டு கொட்டகைக்கு தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்றும் அவர் மிரட்டி உள்ளார். இதனால் மனமுடைந்து மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று சேகர் என்ற சாரங்கநாதனை கைது செய்தனர்.

Next Story