லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயிலில் துரைமுருகன் பெயர் நீக்கக்கோரி அ.தி.மு.க.வினர் முற்றுகை போராட்டம்


லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயிலில் துரைமுருகன் பெயர் நீக்கக்கோரி அ.தி.மு.க.வினர் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 9 Oct 2020 10:45 AM IST (Updated: 9 Oct 2020 10:39 AM IST)
t-max-icont-min-icon

லாலாபேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயிலில் உள்ள ‘நிதி உதவி- துரைமுருகன்’ என்றிருப்பதை நீக்கக்கோரி அ.தி.மு.க.வினர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி நுழைவுவாயில், காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ளது. ஆனால் நுழைவு வாயிலின் முகப்பில் ‘நிதி உதவி துரைமுருகன்’ என்று போடப்பட்டுள்ளது. இதை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இந்தநிலையில் லாலாபேட்டையை சேர்ந்த அ.தி.மு.க.வினர் நேற்று பள்ளியின் முன்பு திரண்டனர். அவர்கள் பள்ளி முகப்பு வாயிலில் உள்ள ‘நிதி உதவி துரைமுருகன்’ என்றிருக்கும் வாசகத்தை அகற்றுமாறு கோரிக்கை விடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தி.மு.க.வினரும் அங்கு திரண்டனர். துரைமுருகனின் சொந்த பணத்தில் கட்டி இருந்தால், இப்படி போட்டுக் கொள்ளலாம், ஆனால் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டிவிட்டு, சொந்த பணத்தில் கட்டியது போல் துரைமுருகன் பெயர் போடப்பட்டிருப்பதை அகற்ற வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் விவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் காந்தி எம்.எல்.ஏ.விடமும் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள் என்று காந்தி எம்.எல்.ஏ. கூறிவிட்டு சென்றுவிட்டார்.

அ.தி.மு.க.வினரும், தி.மு.க.வினரும் ஒரே நேரத்தில் பள்ளி முன்பு திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நுழைவு வாயிலை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. இன்று திறக்க உள்ள நிலையில், முகப்பு வாயிலில் பெயர் அகற்றப்படுமா? அல்லது ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படுமா? என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

Next Story