திண்டிவனம் அருகே சோகம்: ஏரியில் மூழ்கி சிறுவன்-சிறுமி சாவு - பிரேத பரிசோதனைக்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
திண்டிவனம் அருகே ஏரியில் மூழ்கி சிறுவன்-சிறுமி இறந்தனர். அவர்களது உடல்களை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கோவடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ(வயது 38). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி மஞ்சுளா(30). இவருடைய மகள்கள் தீபிகா(13), ஹேமலதா(11).
ராஜூயின் தங்கை வனிதா என்பவர், திண்டிவனம் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தில் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா(7), பவி(5), ராமகிருஷ்ணன் என்கிற தேவேஷ்(4) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வனிதாவின் கணவர் ராமலிங்கம் இறந்து விட்டார். இந்த நிலையில் வனிதாவின் மகன் ராமகிருஷ்ணன், கோவடியில் உள்ள தனது மாமா ராஜூ வீட்டில் தங்கியிருந்தான்.
நேற்று மதியம் தீபிகா, ஹேமலதா, ராமகிருஷ்ணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள், கோவடியில் உள்ள ஏரிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள ஏரியில் குளித்து கொண்டிருந்த போது, நீச்சல் தெரியாததால் ஹேமலதா, ராமகிருஷ்ணன் ஆகியோரில் நீரில் மூழ்கினர்.
இதற்கிடையே வெகுநேரமாகியும் அவர்கள் இருவரும் வெளியில் வராததால், தீபிகா மற்றும் அவருடன் வந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் தேடினர். இருப்பினும் அவர்கள் பற்றிய தகவல் இல்லை. இதையடுத்து சிறுவர்கள் ஊருக்குள் சென்று நடந்த சம்பவம் பற்றி தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் பதறியடித்துக்கொண்டு, ஏரிக்கு வந்தனர். பின்னர் அதில் சிலர் ஏரிக்குள் இறங்கி நீரில் மூழ்கிய ஹேமலதா, ராமகிருஷ்ணனை மீட்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி அறிந்த உறவினர்கள் ஹேமலதா, ராமகிருஷ்ணன் ஆகியோரின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். குளிக்க சென்ற சிறுவன்-சிறுமி நீரில் மூழ்கி பலியான சம்பவத்தை கேட்டு கிராமமே சோகத்தில் மூழ்கியது.
இதற்கிடையே இதுபற்றி அறிந்த கிளியனூர் போலீசார் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து, சம்பவம் குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த சிறுவன்-சிறுமியின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்ப முயன்றனர்.
அப்போது இறந்த குழந்தைகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யாமல், தங்களிடம் வழங்கும் படி உறவினர்கள், போலீசாரிடம் தெரிவித்தனர். இதற்கு போலீசார் மறுத்துவிட்டனர். இதனால் உறவினர்கள், மருத்துவமனையில் இருந்த குழந்தைகளின் உடல்களை வீட்டிற்கு எடுத்து செல்ல முற்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி இறந்த சிறுவன்-சிறுமியின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story