வடிவேலு சினிமா பட காமெடி போல ‘சாலை-வாய்க்காலை காணவில்லை’ என தேனியில் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு


வடிவேலு சினிமா பட காமெடி போல ‘சாலை-வாய்க்காலை காணவில்லை’ என தேனியில் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Oct 2020 6:19 AM GMT (Updated: 9 Oct 2020 6:19 AM GMT)

வடிவேலு சினிமா பட காமெடி போல தேனியில் ‘சாலை-வாய்க்காலை காணவில்லை’ என போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி,

தேனி நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திட்டச்சாலைகள் அமைக்கும் பணி கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இதுவரை சாலை பணிகள் நிறைவு பெறவில்லை. அதுபோல், தேனி நகரில் உள்ள ராஜவாய்க்கால் தூர்ந்துபோய் உள்ளது. இது தூர்வாரப்படாமலும், ஆக்கிரமிப்பின் பிடியிலும் சிக்கி உள்ளது. இந்த பிரச்சினைகள் குறித்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அதிகாரிகளுக்கு பல ஆண்டுகளாக மனு அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை.

நடிகர் வடிவேலு நடித்த ஒரு சினிமா படத்தில் ‘கிணற்றை காணவில்லை’ என அவர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்வது போல காட்சி இடம் பெற்றிருக்கும். கிணறு எப்படி காணாமல் போகும்? என்பதால் இந்த காமெடி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதுபோல, தேனி மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில், தேனி நகரில் நேற்று, ‘காணவில்லை! காணவில்லை!‘ என்று பரபரப்பான போஸ்டர் பல இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தது. அதில், “தேனி நகரத்தில் திட்டச்சாலையையும், ராஜவாய்க்காலையும் காணவில்லை. மாவட்ட நிர்வாகமே கண்டுபிடித்துக் கொடு!“ என்று குறிப்பிட்டு இருந்தனர். இந்த போஸ்டரை சிலர் கிழித்து அகற்றினர்.

இதுகுறித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் சக்கரவர்த்தியிடம் கேட்டபோது, “மக்கள் கோரிக்கையின் வெளிப்பாடாக போஸ்டர் ஒட்டப்பட்டது. திட்டச்சாலையை அமைப்பதுடன், ராஜவாய்க்காலை மீட்காவிட்டால் தொடர் போராட்டங்களை நடத்துவோம். போஸ்டர்களை சில இடங்களில் போலீசாரும், சில இடங்களில் அடையாளம் தெரியாத நபர்களும் கிழித்துள்ளனர்“ என்றார்.

Next Story