தக்கலை அருகே, ரேஷன் அரிசியை கடத்திய டெம்போ விபத்தில் சிக்கியது - காயமடைந்த டிரைவர் தப்பி ஓட்டம்


தக்கலை அருகே, ரேஷன் அரிசியை கடத்திய டெம்போ விபத்தில் சிக்கியது - காயமடைந்த டிரைவர் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 9 Oct 2020 12:15 PM IST (Updated: 9 Oct 2020 12:08 PM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே ரேஷன் அரிசியை கடத்திய டெம்போ விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

பத்மநாபபுரம், 

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி நேற்று காலை ஒரு டெம்போ சென்று கொண்டிருந்தது. தக்கலை கொல்லன்விளை பெட்ரோல் நிலையம் பகுதியில் சென்ற போது டெம்போ திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டேங்கர் லாரி மீது மோதியது.

இதில் டெம்போவின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. மேலும், டெம்போவில் கொண்டுவரப்பட்ட மூடைகள் மற்றும் அதில் இருந்த அரிசி சாலைகளில் சிதறின

இதுபற்றி தக்கலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று டெம்போவில் இடிபாடுகளுக்குள் சிக்கிய டிரைவரை ½ மணிநேரம் போராடி மீட்டு வெளியே கொண்டு வந்தனர். சிறிது நேரத்தில் காயமடைந்த டிரைவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். பின்னர், சாலையில் கிடந்த மூடைகளை தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்திய போது, அது ரேஷன் அரிசி என்பது தெரியவந்தது.

இதையடுத்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது, டெம்போவில் வாழைத்தார்களுக்கு அடியில் 1½ டன் ரேஷன் அரிசியை மறைத்து வைத்து கேரளாவுக்கு கடத்த முயன்ற போது டெம்போ விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. மேலும், தப்பி ஓடிய டிரைவர் இறச்சகுளம் பகுதியை சேர்ந்த பிரதீப்ராஜா என்பதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் 1½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து நாகர்கோவில் உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். டெம்போவை தக்கலை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து டேங்கர் லாரி டிரைவர் ரத்தினம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டெம்போ டிரைவரான இறச்சகுளம் பகுதியை சேர்ந்த பிரதீப்ராஜா என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதேபோல், விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி தினேஷ் சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று அதிகாலையில் குழித்துறையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மினி லாரியில் கடத்தி வந்த 2½ டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

பின்னர், ரேஷன் அரிசியை காப்புக்காடு அரசு கிட்டங்கியிலும், மினி லாரியை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.

Next Story