ஆரல்வாய்மொழி அருகே, மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் தொழிலாளி தற்கொலை
ஆரல்வாய்மொழி அருகே மனைவி கோபித்துக் கொண்டு வெளியே சென்றதால் தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி அருகே தாழக்குடி நடுத் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 35), தொழிலாளி. இவருடைய மனைவி செண்பகம். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அருண்குமாருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த செண்பகம், குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.
மனைவி கோபித்துக் கொண்டு வெளியே சென்றதால், அருண்குமார் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்தநிலையில் நேற்று காலையில் வெகுநேரமாகியும் அருண்குமார் வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவருடைய சகோதரர் ஆனந்த், ஜன்னல் வழியாக வீட்டில் எட்டி பார்த்தார்.
அங்கு அருண்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அருண் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி கோபித்துக் கொண்டு சென்னைக்கு சென்று விட்டதால் மனமுடைந்த தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story