திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்


திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 9 Oct 2020 6:38 AM GMT (Updated: 9 Oct 2020 6:38 AM GMT)

திருப்பூர் 19-வது வார்டில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தக்கோரி 2-வது மண்டல அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாநகராட்சி 19-வது வார்டுக்குட்பட்ட கருப்பராயன்நகரில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதியில் முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மழை காலங்களில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுவதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், இதுவரை அங்கு மழைநீர் வடிகால் வசதி அமைத்து கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் கருப்பராயன்நகரில் மழைநீர் வடிகால் வசதி மற்றும் சாக்கடை கால்வாய் அமைத்து தர வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நேற்று காலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொட்டிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் மோகன் தலைமையில் பிச்சம்பாளையத்தில் உள்ள 2-வது மண்டல அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், அங்கு தரையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து 2-வது மண்டல உதவி கமிஷனர் செல்வநாயகம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

கடந்த பல ஆண்டுகளாக கருப்பராயன்நகர் பகுதிக்கு மழைநீர் வடிகால் மற்றும் சாக்கடை கால்வாய் வசதி இல்லாத நிலை உள்ளது. சாக்கடை கழிவுநீர் இயற்கையாக வெளியேற வழி இல்லாததால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாய சூழல் நிலவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து வருகிறது.

கடந்த பல ஆண்டுகளாக இதே நிலை நீடிப்பதால் பொதுமக்கள் கடும் வேதனைக்குள்ளாகி வருகின்றனர். எனவே உடனடியாக அந்த பகுதிக்கு மழைநீர் வடிகால் மற்றும் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர். பின்னர் இதுதொடர்பான மனுவை உதவி கமிஷனர் செல்வநாயகத்திடம் வழங்கினார்கள். மனுவை பெற்றுக் கொண்ட அவர், இன்னும் 3 மாதத்திற்குள் கருப்பராயன்நகர் பகுதிக்குள் நுழையும் மழைநீரை தடுத்து வடிகால் வசதி அமைத்து தருவதாக உறுதி அளித்தார். இதன் பின்னரே பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story