மராத்தியில் பேச உரிமையாளர் மறுத்ததால் பிரச்சினை நகைக்கடை முன் 20 மணி நேரம் தர்ணா செய்த பெண் எழுத்தாளர்


மராத்தியில் பேச உரிமையாளர் மறுத்ததால் பிரச்சினை நகைக்கடை முன் 20 மணி நேரம் தர்ணா செய்த பெண் எழுத்தாளர்
x
தினத்தந்தி 9 Oct 2020 9:21 PM GMT (Updated: 9 Oct 2020 9:21 PM GMT)

மும்பையில் மராத்தியில் பேச மறுத்த உரிமையாளரை கண்டித்து பெண் எழுத்தாளர் ஒருவர் 20 மணி நேரம் நகைக்கடை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை,

மும்பையை சேர்ந்த மராத்தி எழுத்தாளர் சுபா தேஷ்பாண்டே. இவர் நேற்று முன்தினம் கொலபா பகுதியில் உள்ள நகைக்கடைக்கு கம்மல் வாங்க சென்றார். அப்போது நகைக் கடை உரிமையாளர் சங்கர்லால் ஜெயின் பெண் எழுத்தாளரிடம் இந்தியில் பேசியதாக தெரிகிறது. எனவே பெண் எழுத் தாளர் அவரிடம் மராத்தியில் பேசுமாறு கூறியுள்ளார்.

ஆனால் அவர் மராத்தியில் பேச மறுத்ததுடன், பெண் எழுத்தாளரை கடையில் இருந்து வெளியேற கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண் எழுத்தாளர் நகைக்கடை உரிமையாளரை கண்டித்து கடைமுன் தர்ணாவில் ஈடுபட்டார். இரவு முழுவதும் அவர் தர்ணா செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கண்டிப்பாக மராத்தி தெரிய வேண்டும்

இது குறித்து பெண் எழுத்தாளர் கூறுகையில், “அவர் நகைக்கடையை மராத்தியை தாய் மொழியாக கொண்ட மராட்டிய தலைநகர் மும்பையில் நடத்துகிறார். எனவே அவருக்கு கண்டிப்பாக மராத்தி தெரிந்திருக்க வேண்டும். நான் இந்தி பேச மறுத்ததால் அவர் எனக்கு கம்மல் விற்க மறுத்துவிட்டார். மேலும் என்னை மூர்க்கத்தனமாக கடையில் இருந்து வெளியேறுமாறு கூறினார். அதன் பிறகு தான் போராட்டத்தில் ஈடுபட்டேன்” என்றார்.

சுமார் 20 மணி நேரத்திற்கு பிறகு நேற்று காலை நகைக்கடைக்காரர் மன்னிப்பு கேட்டதால் பெண் எழுத்தாளரின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து போலீசார் அவரை மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

நவநிர்மாண் சேனா எச்சரிக்கை

இதற்கிடையே பெண் எழுத்தாளருக்கு ஆதரவு தெரிவித்து நவநிர்மாண் சேனா கட்சியினர் அங்கு திரண்டனர். அவர்கள் நகைக்கடை உரிமையாளரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இது குறித்து அக்கட்சியின் மூத்த நிர்வாகி சந்தீப் தேஷ்பாண்டே கூறுகையில், “அவர் மராத்தி கற்று கொள்ளும்வரை அவரால் கடையை திறக்க முடியாது” என எச்சாித்தார்.

Next Story