மக்களின் உரிமை காக்க எந்த தியாகத்துக்கும் தயார் நாராயணசாமி ஆவேசம்


மக்களின் உரிமை காக்க எந்த தியாகத்துக்கும் தயார் நாராயணசாமி ஆவேசம்
x
தினத்தந்தி 9 Oct 2020 10:33 PM GMT (Updated: 9 Oct 2020 10:33 PM GMT)

புதுவை மக்களின் உரிமைகளை பாதுகாக்க எந்த தியாகத்துக்கும் தயாராக இருப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கிறது. உதாரணமாக புதுவை மாநில பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தர 4 மாதம் காலதாமதப்படுத்தியது. மாநில அரசின் நிதி அதிகாரம் மற்றும் மக்கள் நலத்திட்டங்களிலும் மத்திய அரசு தலையிடுகிறது.

மக்களுக்கு இலவச அரிசி, துணி வழங்கவேண்டும் என்றால் கவர்னரின் கடித அடிப்படையில் பணமாகத்தான் கொடுப்போம் என்கிறார்கள். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அடிப்படையில் நிலம் குத்தகை, விற்பனை அதிகாரம் மாநில அரசிடம்தான் உள்ளது. ஆனால் அதிலும் தலையிட்டு காலதாமதப்படுத்துகிறார்கள். மத்திய அரசு நமக்கு தரவேண்டிய நிதியையும் தராமல் இழுத்தடிக்கிறது.

ஆண்டுதோறும் ரூ.3 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்கவேண்டும். ஆனால் ரூ.1,500 கோடிதான் தருகிறது. புதுச்சேரியை மத்திய நிதிக் குழுவிலும் சேர்க்கவில்லை. இந்தி மற்றும் நீட் தேர்வினை திணிக்கிறார்கள். இருமொழி கொள்கை என்றால் அவர்கள் மும்மொழிக் கொள்கை என்கிறார்கள். நமது அதிகாரத்தை படிப்படியாக பறித்து தமிழகத்துடன் இணைக்க முயற்சிக்கிறார்கள். இதைத்தான் நான் கூறினேன்.

சிறை செல்ல தயார்

இதை ஒரு சிலர் நான் தேசவிரோதமாக பேசுவதாக கூறுகிறார்கள். என்மீது தேச விரோத வழக்குப்பதிவு செய்யக்கோரி ஊர்வலம் நடத்துகிறார்கள். எதிர்க்கட்சியினர் மீது எதெற்கெடுத்தாலும் மத்திய அரசு தேசவிரோத வழக்குப்போடுவது வாடிக்கையாகி உள்ளது. சி.பி.ஐ., அமலாக்கத் துறையை வைத்து மிரட்டுகிறார்கள். எதிர்க்கட்சியினரை பழிவாங்குவது, மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் மத்திய அரசு முனைப்பாக உள்ளது.

விவசாயமானது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் 3 விதமான சட்டத்தைபோட்டு மத்திய அரசு தனது அதிகாரத்தை அதில் திணிக்கிறது. அதனால்தான் நான் புதுவையை தமிழகத்தோடு இணைக்க முயற்சி செய்கிறார்கள் என்றேன். ஆனால் என்னை கைது செய்து சிறையில் அடைக்க பா.ஜ.க.வினர் ஊர்வலம் நடத்துகிறார்கள். நான் 2 சட்டை வேட்டியுடன் சிறைக்கு செல்ல தயாராக உள்ளேன். சிறைச் சாலையை நான் ஏற்கனவே பார்த்து உள்ளேன்.

பா.ஜ.க. பூச்சாண்டி

புதுவை மக்களின் உரிமையை காக்க, பாரம்பரியம் காக்க எந்த தியாகத்துக்கும் தயாராக உள்ளேன். பாரதீய ஜனதாவின் பூச்சாண்டிக்கெல்லாம் பயப்பட மாட்டேன். மாநில உரிமையைப்பற்றி கவலைப்படாமல் எதிர்க்கட்சிகள் தூங்குகின்றன. மத்திய அரசின் நடவடிக்கைகளை வேடிக்கை பார்க்கிறார்கள். மாநில மக்களைப்பற்றி அவர்களுக்கு கவலையில்லை.

மத்திய அரசின் பல்வேறு தடைகள், கவர்னரின் தொந்தரவை மீறி மேம்பாலத்தை திறந்துள்ளோம். திருக்காஞ்சி மேம்பாலத்தையும் விரைவில் திறப்போம். ரங்கசாமி முடிக்காத பணிகளையும் நாங்கள் முடித்து வருகிறோம். டிசம்பர் மாதம் காமராஜர் மணி மண்டபத்தையும், ஜனவரியில் உப்பனாறு மேம்பாலத்தையும் திறப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story