காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 10 Oct 2020 3:30 AM IST (Updated: 10 Oct 2020 4:13 AM IST)
t-max-icont-min-icon

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

பென்னாகரம், 

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இந்த நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை நுழைவுவாயிலை போலீசார் பூட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் அருகே உள்ள போடூர்பள்ளம், கோவில்பள்ளம், சறுக்கல்பாறை, முத்தூர் மலை மற்றும் பாலக்கோடு, மாரண்டஅள்ளி பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்ததால் ஒகேனக்கல் கிளை ஆறான சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கலந்து பெருக்கெடுத்து ஓடியது.

Next Story