ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்பினார்


ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்பினார்
x
தினத்தந்தி 9 Oct 2020 10:50 PM GMT (Updated: 9 Oct 2020 10:50 PM GMT)

மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்பினார்.

ஆலந்தூர்,

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 22-ந் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையில் விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்துக்கு கடந்த மாதம் 28-ந் தேதி கொரோனா தொற்று உறுதியானதால் அவரும் அதே தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து கடந்த 2-ந் தேதி விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா இருவரும் வீடு திரும்பினார்கள்.

வீடு திரும்பினார்

இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி விஜயகாந்துக்கு உடல் சோர்வு மற்றும் லேசான மயக்கமாக இருப்பதாக கூறி மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்ததில் நல்ல உடல் நலத்துடன் முன்னேற்றம் ஏற்பட்டது.

இது தொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், விஜயகாந்துக்கு மருத்துவ குழுவின் தொடர் கண்காணிப்பின் மூலம் கதிரியக்க பரிசோதனையில் அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து விஜயகாந்த், நேற்று பகல் 1.10 மணியளவில் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு திரும்பினார்.

Next Story