மாவட்டத்தில் 1,450 சலூன் கடைகள் அடைப்பு: நாமக்கல்லில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் 1,450 சலூன் கடைகள் அடைக்கப்பட்டன.
நாமக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் சலூன் கடை நடத்தி வரும் ஒருவரின் 12 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந் தேதி வடமதுரை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கைதான மாணவர் நீதிமன்றத்தால் சமீபத்தில் விடுவிக்கப்பட்டான். இந்த வழக்கில் போலீசார் மேல்முறையீடு செய்து குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று சலூன் கடைகளை அடைத்து அதன் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் சலூன் கடைகளை அடைத்து சவரத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தமிழ்நாடு சவரத்தொழிலாளர்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட பொருளாளர் ரமேஷ் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் சவரத்தொழிலாளியின் 12 வயது மகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி நாமக்கல் மாவட்டத்திலும் இன்று (நேற்று) சவரத்தொழிலாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.
அதன்படி நாமக்கல் நகரில் சுமார் 250 சலூன் கடைகளும், மாவட்டத்தில் 1,200 சலூன் கடைகளும் அடைக்கப்பட்டன என்றார். அப்போது நாமக்கல் நகர தலைவர் மகேஸ்வரன், செயலாளர் கலைவாணன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதேபோல் எருமப்பட்டியில் சவரத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதில் எருமப்பட்டி ஒன்றியத்தில் உள்ள அனைத்து சலூன் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story