வேளாண் மசோதாக்களை கண்டித்து 51 இடங்களில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம்


வேளாண் மசோதாக்களை கண்டித்து 51 இடங்களில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 10 Oct 2020 4:00 AM IST (Updated: 10 Oct 2020 7:54 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் மசோதாக்களை கண்டித்து 51 இடங்களில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

கரூர்,

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும், இதற்கு துணை போகும் அ.தி.மு.க. அரசை கண்டித்தும், தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும் கரூர் மாவட்ட தி.மு.க.சார்பில், 51 இடங்களில் 5,100 பேர் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

கரூர் வடக்கு நகர தி.மு.க. சார்பில் வெங்கமேட்டில் நடைபெற்ற போராட்டத்தில் கரூர் மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வுமான வி.செந்தில்பாலாஜி தலைமை தாங்கி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். கரூர் மேற்கு நகர தி.மு.க. சார்பில் ராயனூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேற்கு நகர பொறுப்பாளர் தாரணி சரவணன் தலைமை தாங்கினார்.

குளித்தலை சுங்ககேட் பகுதி அருகே நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளர் மாணிக்கம் தலைமை தாங்கினார். குளித்தலை பெரிய பாலம் பகுதியில் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவிராஜா, கோட்டைமேடு பகுதியில் ஒன்றிய செயலாளர் சந்திரன், மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட கணேசபுரம் பகுதியில் பேரூர் கழக செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

கரூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தோட்டக்குறிச்சி, புன்செய் புகளூர், காகிதஆலை ஆகிய 3 பேரூராட்சிகள் சார்பில் 3 இடங்களிலும், கரூர் மேற்கு ஒன்றியம் சார்பில் நொய்யல் குறுக்குச் சாலையில் நடைபெற்ற உண்ணாவிரதத்திற்கு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்தார்.

நெய்தலூர் காலனியில் முன்னாள் செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.புகழேந்தி தலைமையிலும், தென்கடைகுறிச்சி பகுதியில் நங்கவரம் பேரூர் செயலாளர் ஏணி சுந்தரம், இனுங்கூரில் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் தேன்மொழி தியாகராஜன் தலைமையிலும் நடைபெற்றது.

புன்செய்புகளூர் தி.மு.க. சார்பில் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்தை பேரூர் செயலாளர் சாமிநாதன், தோட்டக்குறிச்சி தி.மு.க. சார்பில் தளவாப்பாளையத்தில் விவசாயி அணி தலைவர் சின்னசாமி, மண்மங்கலத்தில் கரூர் ஒன்றியத்தை சேர்ந்த கந்தசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கடவூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் தரகம்பட்டி, பாலவிடுதி ஆகிய இடங்களில் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர் தலைமையிலும், வடக்கு ஒன்றியத்தில் வரவணை, வெள்ளப்பட்டி ஆகிய இடங்களில் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் தலைமையில் உண்ணாவிரத போராட் டம் நடைபெற்றது.

அரவக்குறிச்சி மேற்கு ஒன்றியம் வேலம்பாடி ஊராட்சி அண்ணாநகரில் மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.மணியன் தலைமையிலும், பள்ளப்பட்டி நகர செயலாளர் தோட்டம் பசீர் அகமது முன்னிலையிலும், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியம் தகரக் கொட்டகையில் ஒன்றிய செயலாளர் என்.மணிகண்டன் தலைமையிலும், அரவக்குறிச்சியில் நகர செயலாளர் அண்ணாதுரை தலைமையிலும் தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

தோகைமலை மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக குளித்தலை ராமர் எம்.எல்.ஏ. தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. கட்சி அலுவலகம் முன்பாக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தோகைமலை, நாகனூர், பாதிரிபட்டி, பொருந்தலூர், கல்லடை, பில்லூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் இருந்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கழுகூர் ஊராட்சி உடையாப்பட்டியில் இளைஞரணி அமைப்பாளர் சசிகுமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

Next Story