கல்வராயன்மலை, கோமுகி அணையில் கலெக்டர் கிரண்குராலா திடீர் ஆய்வு - கல்படை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க அதிகாரிகளுடன் ஆலோசனை


கல்வராயன்மலை, கோமுகி அணையில் கலெக்டர் கிரண்குராலா திடீர் ஆய்வு - கல்படை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க அதிகாரிகளுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 10 Oct 2020 3:45 AM IST (Updated: 10 Oct 2020 8:49 AM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையில் கலெக்டர் கிரண்குராலா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கல்படை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள கல்வராயன்மலை அடிவாரத்தில்46 அடி கொள்ளளவு கொண்ட கோமுகி அணை உள்ளது. இந்த பகுதியை சுற்றியுள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் கோமுகி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 44 அடியை எட்டியது. தற்போது சம்பா சாகுபடிக்காக புதிய வாய்க்காலில் வினாடிக்கு 50 கன அடியும், பழைய வாய்க்காலில் வினாடிக்கு 60 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கல்வராயன் மலை ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பொட்டியம், கல்படை ஆகிய ஆறுகளின் வழியாக அணைக்கு வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஏற்கனவே அணை 44 அடியை எட்டியிருந்ததால் பாதுகாப்பு கருதி ஆறுகளின் வழியாக அணைக்கு வந்த 1,000 கன அடி தண்ணீரை அதிகாரிகள் அப்படியே வெளியேற்றம் செய்தனர்.

தண்ணீர் வரத்து அதிகரித்ததால் படிப்படியாக 2 ஆயிரம் கனஅடி, 1500 கன அடி என பழைய பாசன வாய்க்கால் வழியாக ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் அக்கராயபாளையம், வடக்கநந்தல், கச்சிராயபாளையம், ஏர்வாய்ப் பட்டினம், தோப்பூர், பட்டா குறிச்சி ஆகிய 6 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

மேலும் கல்படை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் மூழ்கியதால் கல்படை-மல்லிகைபாடி இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா நேற்று கோமுகி அணையை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அணையின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். பின்னர் அணையில் தண்ணீரை சேமித்து வைத்து 2-ம் பருவ சாகுபடிக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து கல்படை ஆற்றின் குறுக்கே உள்ள தரை பாலத்தை கலெக்டர் கிரண்குராலா ஆய்வு செய்தார். அப்போது மழைக்காலங்களில் கல்படை ஆற்றின் தரைப்பாலம் மூழ்கி விடுவதால் மல்லிகை பாடி கிராமத்திற்கும் பிறகு பல்வேறு கிராமங்களில் இருந்தும் மலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் மலைவாழ் மக்கள் அவதிப்பட்டு வருவது குறித்தும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். கல்படை ஆற்றின் குறுக்கே உள்ள தரை பாலத்தை மேம்பாலமாக கட்டுவது குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் கோமுகி அணையின் பாசன வாய்க்கால்களை ஆய்வு செய்த கலெக்டர், விவசாயிகளுக்கு தங்குதடையின்றி தண்ணீர் செல்ல வேண்டும். அனைத்து பகுதியில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தார். அப்போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சுதர்சன் மற்றும் வருவாய் துறையினர், காவல்துறையினர் உடன் இருந்தனர்.

Next Story